உடுமலை பகுதியில் சாலையோர மரங்களுக்கு எமனாகும் கரையான்களைக் கட்டுப்படுத்தி மரங்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உடுமலை பகுதியில் சாலையோர மரங்களுக்கு எமனாகும் கரையான்களைக் கட்டுப்படுத்தி மரங்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2021-04-12 16:28 GMT
போடிப்பட்டி
உடுமலை பகுதியில் சாலையோர மரங்களுக்கு எமனாகும் கரையான்களைக் கட்டுப்படுத்தி மரங்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆக்ஸிஜன் தொழிற்சாலை
மனிதனின் மூச்சுக்காற்றான ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யக்கூடிய ஆக்ஸிஜன் தொழிற்சாலைகளாக மரங்கள் செயல்பட்டு வருகிறது. அத்துடன் பறவைகளின் வாழ்விடமாகவும் பல்லுயிர்ப் பெருக்கத்தின் ஆதாரமாகவும் மழை பெறுவதற்கான கருவியாகவும் செயல்பட்டு வருகிறது. மரம் வளர்ப்பு என்பது இன்று பல பகுதிகளில் தன்னார்வ அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனங்களால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவர்கள் மரக்கன்றுகளை நடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதுதவிர அரசு சார்பில் கிராமங்களில் நூறு நாள் வேலைத்திட்டப் பணியாளர்கள் மூலம் மரம் வளர்ப்புத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஆனால் சாலையோரங்களில் உள்ள நன்கு வளர்ந்த மரங்களின் பராமரிப்பில் யாரும் அக்கறை காட்டுவதில்லை. இதனால் பல மரங்கள் கரையான் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டு காய்ந்து வீணாகும் நிலை உள்ளது. 
எனவே வளர்ந்த மரங்கள் பராமரிப்பிலும் அக்கறை காட்ட வேண்டும் என்று இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது
பெருகி வரும் வாகனப் போக்குவரத்தால் ஏற்படும் காற்று மாசைக் கட்டுப்படுத்துவதில் சாலையோர மரங்கள் பெரும்பங்கு வகிக்கிறது. ஆனால் சாலை விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பல சாலைகள் மரங்கள் இல்லாத வெட்ட வெளியாக மாறி விட்டது. இதனால் காற்றில் கரியமில வாயு அதிகரிப்பது மட்டுமல்லாமல் கோடைக்காலங்களில் அதிக வெப்பத்தின் காரணமாக சாலைகளில் பயணம் செய்வது சிரமமானதாக உள்ளது.
மரப்பயிர்களுக்கும் பாதிப்பு
தற்போது உடுமலை பகுதியிலிருந்து திருமூர்த்திமலை செல்லும் சாலை மற்றும் குமரலிங்கம் செல்லும் சாலையில் பல பகுதிகளில் நன்கு வளர்ந்த மரங்கள் கிளை பரப்பி நிற்பதால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. அதேநேரத்தில் பெதப்பம்பட்டி செல்லும் சாலையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக மரங்கள் காணப்படுகிறது. அந்த மரங்களில் பலவும் காய்ந்த நிலையில் காணப்படுகிறது. ஒருசில மரங்கள் காய்ந்து உடைந்து விழுந்துள்ளது. அங்கு மரம் காய்ந்து விழுந்த நிலையிலும் அதனை விட்டுப் பிரிய மனமில்லாமல் அதன்மேல் அமர்ந்திருக்கும் குருவிகளின் நிலை வேதனையளிப்பதாக உள்ளது.
இதுபோன்ற பாதிப்பு பொள்ளாச்சி சாலை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ளது.இதற்கு முக்கிய காரணமாக கரையான்கள் உள்ளது. 
இந்த கரையான்கள் மரத்தின் அடிப்புறமிருந்து அரித்து மரத்தை காயச் செய்து விடுகிறது.மேலும் இவ்வாறு சாலையோரங்களில் உள்ள மரங்களில் பாதிப்பை ஏற்படுத்தும் கரையான்கள் அருகிலுள்ள விளைநிலங்களிலுள்ள தென்னை, மா போன்ற மரப் பயிர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. எனவே சாலையோர மரங்களைப் பாதுகாப்பதில் அரசும் சமூக ஆர்வலர்களும் அக்கறை காட்ட வேண்டும். ஒரு மரக்கன்றை நட்டு வைத்து அதனை முறையாகப் பராமரித்தால் முழு வளர்ச்சியடைந்த மரமாக மாறி பலன் தருவதற்கு பல ஆண்டுகள் ஆகக்கூடும். ஆனால் வளர்ந்த மரங்களின் பராமரிப்பில் அக்கறை காட்டுவதன் மூலம் மரங்களின் பலனை உடனடியாக அனுபவிக்க முடியும். ஒவ்வொரு மரமும் பல்லாயிரக்கணக்கான உயிர்களின் வாழ்வாதாரம் என்பதைக் கருத்தில் கொண்டு வளர்ந்த மரங்களின் பராமரிப்பில் நெடுஞ்சாலைத்துறை, உள்ளாட்சி நிர்வாகங்கள் மற்றும் தன்னார்வலர்கள் அக்கறை காட்ட வேண்டும்.
இவ்வாறு  அவர்கள் கூறினர். 

மேலும் செய்திகள்