2000 ரூபாய் நோட்டுகளை கலர் ஜெராக்ஸ் எடுத்து திருப்பூரில் புழக்கத்தில் விட முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.

2000 ரூபாய் நோட்டுகளை கலர் ஜெராக்ஸ் எடுத்து திருப்பூரில் புழக்கத்தில் விட முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-04-12 16:25 GMT
காங்கேயம்
2000 ரூபாய் நோட்டுகளை கலர் ஜெராக்ஸ் எடுத்து திருப்பூரில் புழக்கத்தில் விட முயன்றவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 1 லட்சத்து 29 ஆயிரம் கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. 
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
வாகன சோதனை
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள படியூர் சோதனை சாவடியில், காங்கேயம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக திருப்பூரை நோக்கி ஒருவர் வாகனப்பதிவு எண் இல்லாத மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தார். 
எனவே அந்த மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு அங்கு சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் சைகை காட்டினர். ஆனால் அவர் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் அந்த ஆசாமியை விரட்டிச்சென்று மடக்கி பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். மேலும் மோட்டார் சைக்கிளின் ஆர்.சி. புத்தகத்தை எடுக்குமாறு போலீசார் கூறியுள்ளனர். ஆனால் அவரிடம் ஆர்.சி. புத்தகம் இல்லை. 
கள்ளநோட்டுகள்
 இதனால் சந்தேகமடைந்த போலீசார், அந்த மோட்டார் சைக்கிளின் பெட்ரோல் டேங்கின் மீது உள்ள பையை சோதனை செய்துள்ளனர். அப்போது அதில் 2000 ரூபாய் நோட்டுகள், 500 ரூபாய் நோட்டுகள், 200 ரூபாய் நோட்டுகள், 100 ரூபாய் நோட்டுகள் என இருந்தன. ஆனால் இந்த ரூபாய் நோட்டுகளுக்கும், அசல் ரூபாய் நோட்டுகளுக்கும் இடையே நிறத்தில் அதிகவேறுபாடு இருந்தது. 
இதையடுத்து பெட்ரோல் டேங்கில் இருந்த மற்றொரு பையை சோதனை செய்தனர். அந்த பையில் ஏ4 தாளில் 2000 ரூபாய் நோட்டுகள் கலர்ஜெராக்ஸ் எடுக்கப்பட்டு, அது கட் பண்ணாமல் அப்படியே இருப்பது தெரியவந்தது. இதை பார்த்ததும் போலீசார் அதிர்ச்சியடைந்தனர். அப்போதுதான் அவர் வைத்திருந்த பணம் அனைத்தும் கள்ளநோட்டுகள் என தெரியவந்தது. 
பறிமுதல்
இதையடுத்து போலீசார் அவரை கிடுக்கிப்பிடி போட்டு விசாரித்தனர். விசாரணையில் அவர் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தாலுகா கள்ளுக்கடை சந்து பகுதியை சேர்ந்த கண்ணன் என்பதும், கள்ள நோட்டுகளை திருப்பூரில் புழக்கத்தில் விட கொண்டு சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து கண்ணனை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 2000 ரூபாய் கள்ள நோட்டுகள் 39ம், 500 ரூபாய் கள்ள நோட்டுகள் 83-ம், 200 ரூபாய் கள்ள நோட்டுகள் 32ம், 100 ரூபாய் கள்ள நோட்டுகள் 31ம் என மொத்தம் 1 லட்சத்து 29 ஆயிரத்துக்கு கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்தனர். 
கைது 
இதையடுத்து கள்ளநோட்டுகளை அவர் எங்கு அச்சடித்தார்? எங்கெல்லாம் புழக்கத்தில் விட்டார் என்று போலீசார் விசாரித்தனர். மேலும் அவரை கும்பகோணத்திற்கு அவருடைய வீட்டிற்கு அழைத்து சென்று, சோதனை செய்தனர். அப்போது அவருடைய வீட்டில் ரூபாய் நோட்டுகள் பிரிண்ட் எடுக்க பயன்படுத்தப்பட்ட கலர் ஜெராக்ஸ் எந்திரம் மற்றும் மேலும் 2000 ரூபாய் நோட்டுகள் ஜெராக்ஸ் எடுக்கப்பட்ட நிலையில் அவை கட் செய்யாமல் வைத்திருந்த பல தாள்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். 
 இதையடுத்து போலீசார் கண்ணனை காங்கேயம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். திருப்பூரில் 2000 ரூபாய் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட கொண்டு சென்றவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்