செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு

போளூர் அருகே விழுவாம்பாடி கிராமத்தில் செல்போன் டவர் அமைக்க எதி்ர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

Update: 2021-04-12 16:23 GMT
திருவண்ணாமலை

போளூர் அருகே விழுவாம்பாடி கிராமத்தில் செல்போன் டவர் அமைக்க எதி்ர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

மனுக்களை ெபட்டியில் போட்டனர்

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று மக்கள் குறைத்தீர்வு நாள் கூட்டம் நடக்கும். 

தற்போது தேர்தல் நடத்தை விதிகள் தொடர்ந்து அமலில் உள்ளதால் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைத்தீர்வு நாள் கூட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

எனினும், திங்கட்கிழமையான நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு பொதுமக்கள் பலர் மனு கொடுக்க வந்தனர். கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் அருகில் வைக்கப்பட்டு இருந்த மனு பெட்டியில் போட்டு விட்டுச் சென்றனர். ஒரு சிலர், கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளிக்க காத்திருந்து மனு கொடுத்தனர்.

அதில் போளூர் அருகில் உள்ள விழுவாம்பாடி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள், தங்கள் கிராமத்தில் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- 

செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு

எங்கள் ஊரில் ஒருவரின் நிலத்தில் செல்போன் டவர் அமைப்பதற்காக திட்டமிட்டு அங்கு வேலை நடந்து கொண்டு இருக்கிறது. எங்கள் ஊரில் சுமார் 650 வீடுகளும், 1850 மக்களும் உள்ளனர். பள்ளிகளும், அங்கன்வாடிகளும் உள்ளன. கிராமத்தில் செல்போன் டவர் அமைத்தால் மக்களுக்கு பல விபரீதம் நடக்க நேரிடும்.

இதனால் வருங்கால சந்ததியினர் செல்போன் டவரால் பெரிய அளவில் பாதிக்கக்கூடும். எங்கள் கிராமம் சீர்குலைந்து போகக் கூடும். எனவே ஊர் பொதுமக்களின் கோரிக்கை மீது உடனடியாக நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதேபோல் தண்டராம்பட்டு தாலுகா மோத்தக்கல் அஞ்சல் மேல்பாச்சார் கிராமத்தைச் சேர்ந்த நாடகம் மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- 

கலை தொழில்

தமிழகத்தில் ஏற்பட்டு வரும் கொரோனா பாதிப்பின் ஊரடங்கு கட்டுப்பாடுகளால் முதன்மையாகப் பாதிக்கப்பட்ட தொழில் எங்களது கலை தொழில். கடந்த ஆண்டு தொழில் செய்யும் காலங்களின் போது ஏற்பட்ட கொரோனா பாதிப்பு எங்கள் அனைவரையும் நிலைகுலையச் செய்து விட்டது. 
தற்பொது ஒரு ஆண்டு கழித்து அக்கட்டுப்பாடுகள் நீங்கி மீண்டும் வேலை வாய்ப்பு ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் மீண்டும் அறிவிக்கப்பட்ட இந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் எங்கள் கலைஞர்களுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்துவதோடு உயிர்வாழ இயலாத சூழலுக்கு தள்ளப்படும்.

எனவே எங்கள் கலை நிகழ்ச்சிகள் நடத்திடவும், அவைகள் சம்பந்தப்பட்ட கட்டுப்பாடுகளில் நிகழ்ச்சி நடத்திட ஏதுவாக அமையும் வகையில் தளர்வுகள் வழங்கி உத்தரவிட்டு எங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்