அரசு பஸ்களில் பயணிகள் மூலம் கொரோனா பரவும் அபாயம்
கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் பின்பற்றப்படாததால் அரசு பஸ்களில் பயணிகள் மூலம் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
ராமநாதபுரம்,
கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் பின்பற்றப்படாததால் அரசு பஸ்களில் பயணிகள் மூலம் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
கட்டுப்பாடுகள்
தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களுக்கு மேலாக மீண்டும் கொரோனா தொற்று அதிகமாக பரவ தொடங்கி விட்டது. அதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டுள்ளன.
இந்த நிலையில் ராமநாதபுரம் பகுதியில் இருந்து மதுரை, திருச்சி, நாகப்பட்டினம், பழனி, திருச்செந்தூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு வெளியூர்களுக்கு இயக்கப்பட்டு வரும் அரசு பஸ்களில் அரசு விதித்துள்ள கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முழுமையாக பின்பற்றவில்லை. குறிப்பாக பஸ்களில் பயணிகள் நின்று கொண்டு பயணம் செய்யக்கூடாது என கட்டுப்பாடு விதிக்கப் பட்டுள்ளது.
ஆனால் ராமநாதபுரத்தில் இருந்து மதுரை உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கும் இயக்கப்பட்டு வரும் அரசு பஸ்களில் ஏராளமான பயணிகள் நின்று தான் பயணம் செய்கின்றனர். டிக்கெட் கலெக்சனுக்காக பெரும்பாலான பஸ்களில் இருக்கை முழுமையான நிலையில் பயணிகள் நின்று கொண்டு செல்லும் வகையில் பயணிகளை ஏற்றி செல்கின்றனர்.அதுபோல் பஸ்களில் பயணம் செய்யும் பெரும்பாலான பயணிகள் முககவசம் அணியாமல் பயணம் செய்து வருகின்றனர்.
கோரிக்கை
அரசுபஸ்களில் முககவசம் அணியாமலும், பயணிகள் மிக நெருக்கமாக நின்று கொண்டு பயணம் செய்வதாலும் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் இயக்கப்படும் அரசு பஸ்களில் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை பின்பற்ற மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.