மினிலாரி கவிழ்ந்து 20 பேர் காயம்
துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு திரும்பியபோது மினிலாரி கவிழ்ந்து 20 பேர் காயம் அடைந்தனர்
செம்பட்டி:
செம்பட்டி அருகே உள்ள வீரசிக்கம்பட்டியை சேர்ந்தவர் பொம்மக்காள் (வயது40). நேற்று முன்தினம் இரவு இவர், சாலை விபத்தில் பலியானார். அவருடைய உடல், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அங்குள்ள மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இதனையடுத்து பொம்மக்காளின் உறவினர்கள் திண்டுக்கல் வந்தனர். பின்னர் திண்டுக்கல்லில் இருந்து வீரசிக்கம்பட்டி நோக்கி மினிலாரியில் 25-க்கும் மேற்பட்டோர் சென்று கொண்டிருந்தனர்.
மினிலாரியை சொக்கலிங்கபுரத்தை சேர்ந்த பூத்தன் (45) என்பவர் ஓட்டினார்.
திண்டுக்கல்-வத்தலக்குண்டு சாலையில் வக்கம்பட்டி அருகே கள்ளுக்கடை பிரிவு என்ற இடத்தில் மினி லாரி சென்று கொண்டிருந்தது.
அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பூத்தன், வீரசிக்கம்பட்டியை சேர்ந்த அழகர்சாமி, சந்திரன், ரமேஷ், சூரி (என்ற) நாகராஜ், பெருமாள் உள்பட 20 பேர் படுகாயம் அடைந்தனர்.
இவர்களுக்கு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.