சிறுவர்- சிறுமிகளுக்கு இலவசமாக சிலம்பம் கற்றுக்கொடுக்கும் பெண்

வேதாரண்யம் அருகே 10 ஆண்டுகளாக சிறுவர்- சிறுமிகளுக்கு பெண் ஒருவர் இலவசமாக சிலம்பம் கற்று கொடுத்து வருகிறார்.;

Update:2021-04-12 20:40 IST
வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே 10 ஆண்டுகளாக சிறுவர்- சிறுமிகளுக்கு பெண் ஒருவர் இலவசமாக சிலம்பம் கற்று கொடுத்து வருகிறார். 
சிலம்பம் கற்றுக்கொடுக்கும் பெண்
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள கரியாப்பட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் மாலா. இவரது கணவர் மதியழகன். இவர்கள் கரியாப்பட்டினத்தில் டீக்கடை நடத்தி வருகின்றனர். மாலாவின் தந்தை கணேசன் வேதாரண்யம் அருகே உள்ள மனியன்தீவில் சிலம்ப ஆசிரியராக இருந்து கடந்த 40 ஆண்டுகளாக சிலம்ப  கலையை  கற்று கொடுத்து வந்தார். தனது தந்தையிடம் சிறு வயது முதல் சிலம்பம் கற்று வந்த மாலா தான் கற்ற கலையை மற்றவர்களுக்கும் கற்று கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இலவசமாக சிறுவர்- சிறுமிகளுக்கு சிலம்ப கலையை கற்று கொடுத்து வருகிறார்.  
மிகுந்த மனநிறைவு
தனது கணவர் ஒத்துழைப்போடு மாலா கரியாப்பட்டினத்தில் உள்ள தனது டீக்கடைக்கு அருகில் கடந்த 10 ஆண்டுகளாக நூற்றுக்கணக்கான சிறுவர்- சிறுமிகளுக்கு நாள்தோறும் மாலை நேரத்தில் சிலம்பம் மற்றும் கோலாட்டம் ஆகியவற்றை இலவசமாக கற்று கொடுத்து வருகிறார். 
இதுகுறித்து மாலா கூறுகையில், 
பெண் குழந்தைகளுக்கு தைரியத்தையும், தன்னம்பிக்கையும் வரவைக்கும் நோக்கத்தோடு அழிந்து வரும் சிலம்பாட்டத்தை இலவசமாக கற்றுக்கொடுப்பது தனக்கு மிகுந்த மனநிறைவை தருகிறது என்றார்.

மேலும் செய்திகள்