சமூக இடைவெளியை பின்பற்றாத டீக்கடைக்கு சீல்
சமூக இடைவெளியை பின்பற்றாத டீக்கடைக்கு சீல்
கோவை
சமூக இடைவெளி பின்பற்றாத ரேஸ்கோர்சில் உள்ள டீக்கடைக்கு சீல் வைக்கப்பட்டது. இதனால் ஊழியர்கள் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கடைக்கு சீல்
கோவையில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் வேகம் அதிகரித்து வருகிறது. எனவே தொற்றை கட்டுப்படுத்த மாநகராட்சி சார்பில் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. முகக்கவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளியை பின்பற்றாத நிறுவனங்களுக்கு அபாராதம் விதிக்கப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று காலை ரேஸ்கோர்சில் உள்ள ஒரு டீக்கடை சமூக இடைவெளியை பின்பற்றாமல் ஏராளமானோர் டீ குடித்துக் கொண்டிருந்தனர். இதை அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து வந்து அந்த கடையை பூட்டி சீல் வைத்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த கடை ஊழியர்கள் திடீரென்று சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
இதனால் அந்த ரோட்டில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதை அறிந்த ரேஸ்கோர்ஸ் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது ஊழியர்கள், கடைக்கு சீல் வைத்ததால் தங்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டு உள்ளதாக கூறினர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தினர். அதை ஏற்று ஊழியர்கள் மறியலை கைவிட்டனர்.
இது குறித்து மாநகராட்சி ஊழியர்கள் கூறும்போது, கடந்த 2 நாட்களுக்கு முன்பு கொரோனா விதிமுறைகளை பின்பற்றாததால் அந்த கடைக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
ஆனால் மீண்டும் சமூக இடைவெளியின்றி செயல்பட்டதால் அந்த கடை பூட்டி சீல் வைக்கப்பட்டது என்றனர்.