வேரோடு சாய்ந்த ராட்சத மரம்

கூடலூர்-ஊட்டி சாலையில் ராட்சத மரம் வேரோடு சாய்ந்தது. இதனால் அந்த வழியே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2021-04-12 14:20 GMT
கூடலூர்,

கூடலூரில் இருந்து ஊட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஊமைத்துரைக்காடு பகுதியில் நேற்று மதியம் 12.45 மணிக்கு ராட்சத மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. மேலும் மின் கம்பிகளும் அறுந்தது. தொடர்ந்து மரத்தின் ஒரு கிளை அந்த வழியாக சென்ற மினி லாரியின் மீது தட்டியது. 

இதில் லாரியின் முகப்பு கண்ணாடி உடைந்தது. மின் கம்பிகள் அறுந்ததால் ஹெல்த்கேம்ப், அரசு மேல்நிலைப்பள்ளி, கெவிப்பாரா, நடு மற்றும் மேல் கூடலூர் உள்பட பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. மேலும் கூடலூர்-ஊட்டி சாலையில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வெட்டி அகற்றினர்

இதுகுறித்து தகவல் அறிந்த கூடலூர் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் சாலையின் குறுக்கே விழுந்து கிடந்த ராட்சத மரத்தை மின் வாள்கள் மூலம் தீயணைப்புத்துறையினர் வெட்டி அகற்றினர்.

இதனால் அந்த வழியே சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு போக்குவரத்து சீரானது. இந்த சம்பவத்தால் கன்னியாகுமரி, சென்னை மற்றும் மைசூரு, கோவை உள்பட பல்வேறு பகுதிக்கு செல்லும் பஸ்கள் மற்றும் தனியார் வாகனங்கள் மிக தாமதமாக புறப்பட்டு சென்றது.

ஆம்புலன்ஸ் தாமதம்

இதேபோன்று நோயாளியை ஏற்றிக்கொண்டு ஊட்டிக்கு செல்ல இருந்த ஆம்புலன்சும் நடுவழியில் நிறுத்தப்பட்டது. மரத்தை வெட்டி அகற்றிய பிறகு ஆம்புலன்ஸ் தாமதமாக புறப்பட்டு சென்றது. 

தொடர்ந்து அப்பகுதிக்கு மின்வாரிய ஊழியர்கள் வந்து, அறுந்து கிடந்த மின் கம்பிகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். மரம் விழுந்து மின்கம்பிகள் அறுந்து விழுந்ததால் மின்சாரமின்றி பொதுமக்களும் கடும் சிரமத்துக்கு ஆளாகினர்.

மேலும் செய்திகள்