வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக ஆட்டோ டிரைவர்கள் கவலை
ஆட்டோவில் 2 பேர் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்பட்டு உள்ளதால், வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக ஆட்டோ டிரைவர்கள் கவலை தெரிவித்து உள்ளனர்.
கூடலூர்,
ஆட்டோவில் 2 பேர் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்பட்டு உள்ளதால், வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக ஆட்டோ டிரைவர்கள் கவலை தெரிவித்து உள்ளனர்.
புதிய கட்டுப்பாடு
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது.இதையொட்டி ஆட்டோவில் டிரைவர் மற்றும் 2 பயணிகள் மட்டுமே செல்ல வேண்டும்என்ற புதிய கட்டுப்பாடு அமலில் உள்ளது.
நீலகிரி மாவட்டத்திலேயே அதிகபட்சமாக கூடலூர் நகரில் மட்டும் சுமார் 2,500 ஆட்டோக்கள் இயக்கப்படுகிறது. இங்கு கொரோனா கட்டுப்பாடு காரணமாக ஆட்டோக்களில் செல்ல 2 பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.
ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வால் ஆட்டோ உள்ளிட்ட வாடகை வாகன டிரைவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். தற்போது கட்டுப்பாடுஅமல்படுத்தப்பட்டு உள்ளதால், அவர்களுக்கு போதிய வருவாய் கிடைப்பதில்லை. இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக அவர்கள் கவலை தெரிவித்து உள்ளனர்.
வாழ்வாதாரம் பாதிப்பு
இதுகுறித்து கூடலூர் பகுதி ஆட்டோ டிரைவர்கள் கூறியதாவது:-
எங்கள் பகுதியில் உள்ள பல்வேறு மலைக்கிராமங்களுக்கு பஸ் வசதி கிடையாது. இதனால் ஆட்டோக்களை மக்கள் பயன்படுத்த வேண்டி உள்ளது.
தமிழகத்திலேயே கூடலூர் பகுதியில்தான் மிகக்குறைவாக ஆட்டோ கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தாலும் பெரிய அளவில் கட்டணம் உயர்த்தப்படுவதில்லை.
ஆனால் 2 பயணிகள் மட்டுமே அழைத்து செல்ல வேண்டும் என்பதால், 4 அல்லது 5 பேராக குடும்பத்துடன் வருபவர்களை ஏற்ற முடியாத நிலை உள்ளது. இதனால் வருமானம் குறைந்து எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.