எட்டயபுரத்தில் பேரூராட்சி அலுவலகத்தை பா.ஜனதாவின் முற்றுகை
எட்டயபுரத்தில் பேரூராட்சி அலுவலகத்தை பா.ஜனதாவினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
எட்டயபுரம்:
எட்டயபுரத்தில் தரமற்ற முறையில் சிமெண்டு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளதை கண்டித்தும், முறையாக சாலைகள் அமைக்க வலியுறுத்தியும் பா.ஜனதா கட்சியினர் நேற்று பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
முற்றுகை போராட்டம்
எட்டயபுரம் பேரூராட்சி அலுவலகத்துக்கு மாவட்ட பா.ஜனதா செயலாளர் ஆதிராஜ் தலைமையில் அக்கட்சியினர் சிலர் வந்தனர்.
பேரூராட்சி பகுதியில் தரமற்ற முறையில் சிமெண்டு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளதை கண்டித்தும், முறையாக சாலைகளை அமைக்க வலியுறுத்தியும் பா.ஜனதாவினர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
கோரிக்கை
பின்னர் அக்கட்சியினர் பேரூராட்சி அலுவலகத்தில் நிர்வாக அதிகாரி கணேசனிடம் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
எட்டயபுரம் பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட சாலை பாதை, பழைய சந்தபேட்டை ரோடு, பழைய போலீஸ் லைன் தெரு, பட்டத்து விநாயகர் கோவில் தெரு ஆகிய இடங்களில் ரூ.50லட்சம் மதிப்பீட்டில் புதிதாக சிமெண்டு சாலைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
இந்தச் சாலைகளில் வெடிப்பு ஏற்பட்டு மக்கள் நடந்து செல்லக்கூட முடியாத அளவில் தரமற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையில் இருந்து கற்கள் வெளியே தெரிவதால் முதியோர், குழந்தைகள் நடந்து செல்ல முடியவில்லை. இந்தச் சாலை தரமற்ற முறையில் அமைக்கப்பட்டதால் எம்.சாண்ட் தூசிப் படலம் ஏற்படுகிறது.
எனவே தரமற்றமுறையில் அமைக்கப்பட்டுள்ள இந்த சாலைகளை ஆய்வு செய்து முறையாக சாலைகளை மறுசீரமைப்பு செய்து தரவேண்டும். இல்லையென்றால் பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்களை திரட்டி போராட்டம் நடத்துவோம்.
மேலும், சிங்காரத்தோப்பு பகுதியில் தார்ச்சாலையோடு அமைக்கப்பட்டுள்ள கால்வாயில் கழிவுநீர் செல்லாமல் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. அதனை சரி செய்து தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.
அதிகாரி உறுதி
இந்த மனுவை பெற்று கொண்ட நிர்வாக அதிகாரி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.. இதை தொடர்ந்து அவர்கள் முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தில் பா.ஜனதா நகர தலைவர் நாகராஜன், இந்து முன்னணி நகர தலைவர் ஜெயச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.