கருப்பூர் அருகே பெண்ணின் எலும்புக்கூடு கண்டெடுப்பு-கொலை செய்யப்பட்டாரா? போலீசார் விசாரணை

கருப்பூர் அருகே பெண்ணின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது. அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.;

Update: 2021-04-11 22:13 GMT
கருப்பூர்:
கருப்பூர் அருகே பெண்ணின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது. அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
எலும்புக்கூடு
சேலம் மாவட்டம் கருப்பூர் அருகே மத்திய அரசுக்கு சொந்தமான, வெள்ளை கற்கள் வெட்டி எடுக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.
இந்த தொழிற்சாலை பகுதியை தேக்கம்பட்டி, செங்கரடு, சேனைகவுண்டனூர் போன்ற கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் குறுக்கு வழியாக சேலம் செல்வதற்கு பாதையாக பயன்படுத்தி வந்தனர். ஆனால் இரவு நேரங்களில் அப்பகுதி வழியாக யாரும் செல்வதில்லை.
முட்கள் நிறைந்த அந்த பகுதியில் எலும்புக்கூடு கிடந்தது. இதுபற்றி நேற்று கருப்பூர் கிராம நிர்வாக அலுவலர் ரவிச்சந்திரனுக்கு தகவல் கிடைத்தது. அவர் கருப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) தெய்வீகசிகாமணி, சப்-இன்ஸ்பெக்டர் சத்தியமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டனர்.
கொலையா?
விசாரணையில், அது ஒரு பெண்ணின் எலும்புக்கூடு என்று தெரியவந்தது. அந்த பெண் இறந்து சில வாரங்கள் இருக்கும் என கூறப்படுகிறது.
அந்த எலும்புக்கூடு அருகில் சேலை, மதுபாட்டில்கள் கிடந்தன. அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்?, எப்படி இறந்தார்? என்பது பற்றி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது அவருடைய சாவுக்கு வேறு காரணம் உள்ளதா? என்பது பற்றியும் போலீசார் விசாரணை நடத்துகிறார்கள். தொடர்ந்து அந்த எலும்புக்கூட்டை கைப்பற்றி சேலம் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
போலீசார் வேண்டுகோள்
இதுகுறித்து போலீசார் கூறும்போது, அந்த பகுதியில் ஆடு, மாடு மேய்த்தவர்களோ அல்லது சுற்றுப்புற கிராம பகுதியை சேர்ந்த பெண்களோ காணாமல் போய் இருந்தால் உடனே கருப்பூர் போலீஸ் நிலையத்தை தொடர்பு கொள்ளலாம், என்றனர்.
பெண்ணின் எலும்புக்கூடு கிடந்தது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்