சேலம்-விருத்தாசலம் ரெயில் வாழப்பாடியில் நின்று செல்லுமா?-கிராம மக்கள் எதிர்பார்ப்பு
சேலம்-விருத்தாசலம் ரெயில் வாழப்பாடி ரெயில் நிலையத்தில் நின்று செல்லுமா? என்று கிராம மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
வாழப்பாடி:
சேலம்-விருத்தாசலம் ரெயில் வாழப்பாடி ரெயில் நிலையத்தில் நின்று செல்லுமா? என்று கிராம மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
பயணிகள் ரெயில்
சேலம்-விருத்தாசலம் ரெயில் பாைத கடந்த 2007-ம் ஆண்டு அகல ரெயில்பாதையாக மாற்றப்பட்டது. இந்த வழித்தடத்தில் சேலம்-விருத்தாசலம் பயணிகள் ரெயில் மட்டுமின்றி, சேலம்-சென்னை எழும்பூர் விரைவு ரெயில், பெங்களூரு- காரைக்கால் பயணிகள் ரெயில் மற்றும் சிறப்பு ரெயில்களும் இயக்கப்பட்டு வந்தன.
குறிப்பாக, காலை மற்றும் மாலை வேளைகளில் இயக்கப்பட்ட சேலம்-விருத்தாசலம் பயணிகள் ரெயில் வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம், தலைவாசல் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்புற மக்களின் போக்குவரத்துக்கு வரப்பிரசாதமாக அமைந்தது. குறைந்த கட்டணத்தில் பயணம் செய்வதற்கு வசதியாக அமைந்ததால், கூலித்தொழிலாளர்கள் முதல் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், வியாபாரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பயன்படுத்தி வந்தனர்.
சிறப்பு ரெயிலாக இயக்கம்
இந்த நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த, நாடு முழுவதும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டதால், அனைத்து ரெயில் சேவைகளும் நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து மத்திய அரசு தளர்வுகளை அறிவித்ததால், ஓராண்டாக நிறுத்தப்பட்டிருந்த சேலம்- விருத்தாசலம் இடையே ரெயில் போக்குவரத்து சேவை, கடந்த மார்ச் மாதம் 15-ந் தேதியில் இருந்து மீண்டும் தொடங்கியுள்ளது.
பயணிகள் ரெயில் தரத்தில் இருந்து சிறப்பு ரெயிலாக மாற்றப்பட்டு, கட்டண உயர்வுடன் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் தற்போது சேலம் டவுன் ரெயில் நிலையத்துக்கு அடுத்து ஏத்தாப்பூர், ஆத்தூரில் நின்று செல்கிறது. ஆனால் அதிக வருவாய் ஈட்டிக் கொடுக்கும் முக்கிய ரெயில் நிலையங்களான வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம், தலைவாசல் ஆகிய இடங்களில் நின்று பயணிகளை ஏற்றி, இறக்கி செல்வது இல்லை.
எதிர்பார்ப்பு
50-க்கும் மேற்பட்ட சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த மக்களுக்கு பிரதான போக்குவரத்து அம்சமாக விளங்கிய சேலம்-விருத்தாசலம் ரெயில் வாழப்பாடியில் நிற்காததால், கிராம மக்களின் போக்குவரத்தில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. குறைந்த கட்டணத்தில் சேலம், ஆத்தூர் பகுதிக்கு வேலைக்கு சென்று வந்த தொழிலாளர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, வாழப்பாடி மற்றும் சுற்றுப்புற கிராம மக்களின் நலன் கருதி, சேலம்-விருத்தாசலம் சிறப்பு ரெயில் அந்தஸ்தை ரத்து செய்து மீண்டும், பயணிகள்ரெயிலாக மாற்றவும், கட்டணத்தை குறைக்கவும், வழக்கம்போல் வாழப்பாடி ரெயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என்பது கிராம மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.