சேலத்தில் டாஸ்மாக் பாரில் தகராறு: பீர் பாட்டிலால் குத்தி வியாபாரி கொலை-5 பேர் கைது
சேலத்தில் டாஸ்மாக் பாரில் ஏற்பட்ட தகராறில் வியாபாரி பீர் பாட்டிலால் குத்திக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
சேலம்:
சேலத்தில் டாஸ்மாக் பாரில் ஏற்பட்ட தகராறில் வியாபாரி பீர் பாட்டிலால் குத்திக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
பழ வியாபாரி
சேலம் கிச்சிப்பாளையத்தை சேர்ந்தவர் கிருபாகரன் (வயது 40). இவர் சேலம் ஆனந்தா பாலம் மார்க்கெட் பகுதியில் தள்ளுவண்டியில் பழ வியாபாரம் செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு வியாபாரத்தை முடித்து விட்டு, அந்த பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் பாரில் தனது நண்பர்கள் மேட்டுத்தெருவை சேர்ந்த ஆமதி உசேன் (30), பட்டக்கோவிலை சேர்ந்த சீனிவாசன் (27) ஆகியோருடன் அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்தார்.
இவர்களுக்கு அருகில் மேட்டுத்தெருவை சேர்ந்த மோகன் குமார் (25), ஆட்டோ டிரைவர் கோகுலகிருஷ்ணன் மற்றும் இவரது நண்பர்கள் 3 பேர் சேர்ந்து மது குடித்துக்கொண்டிருந்தனர். மோகன் குமார் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கிருபாகரனின் நண்பர் ஒருவரது மனைவியுடன் சுற்றித்திரிந்ததாக கூறப்படுகிறது. இதை பார்த்த கிருபாகரனின் நண்பர்கள் எச்சரித்து இருவரையும் பிரித்து அவரவர் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
கொலை வழக்கு
இந்த நிலையில் மதுபோதையில் இருந்த மோகன் குமார், நான் பெண்ணுடன் சுற்றியதை ஏன் தடுத்து பிரித்து அனுப்பி வைத்தீர்கள் என்று கேட்டு உள்ளார். இதனால் இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மோகன் குமார், கோகுலகிருஷ்ணன் மற்றும் 3 பேர் சேர்ந்து பீர் பாட்டில், கத்தியால் கிருபாகரன், ஆமதி உசேன், சீனிவாசன் ஆகிய 3 பேரை சரமாரியாக குத்தினர். மேலும் இதை தடுக்க வந்த பட்டக்கோவிலை சேர்ந்த அம்ஜத் என்பவரையும் பாட்டிலால் குத்தினர். இதில் 4 பேரும் படுகாயம் அடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த சேலம் டவுன் போலீஸ் உதவி கமிஷனர் மணிகண்டன், இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயம் அடைந்த 4 பேரையும் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் படுகாயம் அடைந்த கிருபாகரன் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். இது குறித்து சேலம் டவுன் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து மோகன் குமார், கோகுலகிருஷ்ணன் (33), சுரேஷ் குமார் (29), பங்கி மோகன் (24), மணிகண்டன் (24) ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
போலீஸ் பாதுகாப்பு
பழவியாபாரி கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்த அவரது உறவினர்கள் நேற்று சேலம் அரசு ஆஸ்பத்திரியில் குவிந்தனர். பின்னர் கிருபாகரன் உடலை பார்த்து கதறி அழுதனர். அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் தடுக்க சேலம் அரசு ஆஸ்பத்திரி மற்றும் கிச்சிப்பாளையம் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
பெண் விவகாரத்தில் டாஸ்மாக் பாரில் ஏற்பட்ட தகராறில் வியாபாரி குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.