புளியஞ்சோலையில் காற்றில் பறக்கும் கொரோனா கட்டுப்பாடுகள்
புளியஞ்சோலையில் கொரோனா கட்டுப்பாடுகள் காற்றில் பறந்து வருகிறது.
உப்பிலியபுரம்,
திருச்சி மாவட்டத்திலுள்ள சுற்றுலா தலங்களில் மிகவும் பிரசித்து பெற்றது புளியஞ்சோலை. கொல்லிமலையில் ஊற்றெடுக்கும் ஆகாயகங்கை நீர்வீழ்ச்சியின் நீரானது, புளியஞ்சோலையில் அய்யாறாக உருமாறி கீழ்நோக்கி பாய்கிறது.
பச்சை பசேலேன அடர்ந்த வனப்பகுதி கொண்ட புளியஞ்சோலைக்கு, பொதுமக்கள் விடுமுறை நாட்களில் திரண்டு வருவது இயல்பு. ஒரு வனக்காவலரையும், வன அலுவலரையும் மட்டுமே கொண்டு இயங்கும் இப்பகுதியில், அடிக்கடி சண்டை சச்சரவுகள் நிகழ்வதுண்டு.
இந்தநிலையில் கோடை வெப்பத்தை தணிக்க நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் புளியஞ்சோலைக்கு வந்திருந்தனர். கொரோனா இரண்டாவது அலை உச்சத்தில் உள்ள காலகட்டத்தில், அவர்கள் முக கவசமின்றி, சமூக இடைவெளி மறந்து உல்லாசமாக குளித்து மகிழ்ந்ததை காண முடிந்தது.
எனவே புளியஞ்சோலைக்கு திரண்டு வரும் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதுடன், போலீசாரின் கண்காணிப்புகளை முறைப்படுத்தவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.