சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அமாவாசையை முன்னிட்டு அலைமோதிய பக்தர்கள் கூட்டம் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அமாவாசையான நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி அம்மனை பயபக்தியுடன் வழிபட்டனர்.
சமயபுரம்,
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அமாவாசையான நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி அம்மனை பயபக்தியுடன் வழிபட்டனர்.
மாரியம்மன் கோவில்
அம்மன்கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம்மாரியம்மன் கோவில் ஆகும். இக்கோவிலில் அம்மனை தரிசனம்செய்வதற்காக செவ்வாய், புதன், வெள்ளி, ஞாயிறு போன்ற தினங்களிலும், அமாவாசை, பவுர்ணமி போன்றநாட்களிலும் ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாகவும், கார், வேன், பஸ் போன்ற வாகனங்களிலும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சமயபுரம் வருவார்கள்.
அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
இந்நிலையில் நேற்று அமாவாசை என்பதால், காலையில்இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் மஞ்சள் உடை உடுத்தி, பாதயாத்திரையாகவும், பல்வேறு வாகனங்களிலும் சமயபுரம் வந்தனர். பின்னர் அவர்கள் முடிகாணிக்கைசெய்தும், அக்னிசட்டி ஏந்தியும், குழந்தையை கரும்பு தொட்டிலில் சுமந்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து கோவிலின்முன்புறம் தேங்காய் உடைத்தும், விளக்குஏற்றும் இடத்தில் தீபம்ஏற்றியும் பக்தர்கள் வழிபட்டனர். பின்னர் நீண்ட வரிசையில் கோவிலுக்குள் சென்று அம்மனை வணங்கிச்சென்றனர். இதேபோல் இனாம்சமயபுரம் ஆதி மாரியம்மன் கோவிலிலும் ஏராளமான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்.
போலீசார் பாதுகாப்பு
கூட்டநெரிசலை பயன்படுத்தி சமூகவிரோதிகள் செயின்பறிப்பு, வழிப்பறி போன்ற சம்பவங்களில் யாரேனும் ஈடுபடுகிறார்களா என்று கண்காணிக்கும் வகையில் சமயபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கொ ரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் வெளியில் வரும்பொது மக்கள் முககவசம் அணிந்து வர வேண்டும் என்று அரசுஉத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால், நேற்று பெரும்பாலான பொதுமக்கள் முக கவசம் அணியாமல் வந்ததைக்காண முடிந்தது.