கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்கான ஆலோசனை

கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Update: 2021-04-11 19:28 GMT
அரியலூர்:
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ரத்னா தலைமை தாங்கினார். மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தரேஸ் அஹமது முன்னிலை வகித்தார். கூட்டத்தில், மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறித்தும், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள மருத்துவ வசதிகள் குறித்தும் விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. கூட்டத்தில் கலெக்டர் பேசுகையில், தற்போது ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகள் வருகிற 30-ந் தேதி நள்ளிரவு 12 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை உடனடியாக தீவிரப்படுத்த அரசு உத்தவிட்டதன் அடிப்படையில், கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்தியும், தடுப்பூசி போடுவதை மேலும் விரிவுபடுத்தவும் மாவட்ட நிர்வாகம் தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களை விரைவாக கண்டறியும் வகையில் சோதனைகளை அதிகப்படுத்தவும், கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதிபடுத்தப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கும் வகையில் தேவையான வசதிகளை ஏற்படுத்தவும், மேலும் கொரோனா வைரஸ் நோயாளிகளுடன் தொடர்புடைய நபர்களுக்கு பரிசோதனைகளை மேற்கொண்டு அவர்களுக்கும் உரிய சிகிச்சை அளிக்கும் வகையில் ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றாதவர்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும், என்றார். கூட்டத்தில் திட்ட இயக்குனர் (ஊரக வளர்ச்சி முகமை) சுந்தர்ராஜன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பூங்கோதை, மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் முத்துகிருஷ்ணன் மற்றும் கோட்டாட்சியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்