தென்காசி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு; 300 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டனர்

தென்காசி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதையொட்டி 300 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டனர்.

Update: 2021-04-11 19:25 GMT
தென்காசி, ஏப்:
தென்காசி மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட 300 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டனர்.

வீடுகளில்  தனிமைப்படுத்தப்பட்டனர்

நாடு முழுவதும் உயிர்க்கொல்லி நோயான கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது முககவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது.
தென்காசி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 28 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இவர்கள் தென்காசி மற்றும் சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தென்காசி மாவட்டத்தில் வீடுகளில் சுமார் 300 பேர் தொற்று பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். 

கூடுதல் படுக்கைகள்

தென்காசி மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா சிகிச்சைக்காக தனி வார்டு அமைக்கப்பட்டு கூடுதல் படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டு அனைத்து வசதிகளும் தயார் நிலையில் உள்ளன. இதுதவிர தென்காசி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள தனியார் கல்லூரிகளில் இதற்கான வார்டுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. 
பொதுமக்கள் பொது இடங்களுக்கு வரும்போது கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். திருவிழாக்கள், விஷேச நிகழ்ச்சிகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவினால் சிகிச்சை பெறுபவர்களுக்கு யோகா மற்றும் உடற்பயிற்சி கற்றுக் கொடுக்கப்படுகிறது.

மேலும் செய்திகள்