செல்போனில் விளையாடியதை தந்தை கண்டித்ததால் விஷம் குடித்த பிளஸ்-1 மாணவி சாவு

திருச்செங்கோடு அருகே செல்போனில் விளையாடியதை தந்தை கண்டித்ததால் விஷம் குடித்த பிளஸ்-1 மாணவி பரிதாபமாக இறந்தார்.

Update: 2021-04-11 19:04 GMT
எலச்சிபாளையம்,

திருச்செங்கோடு அருகே உள்ள குச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சிவராமன். தனியார் கம்பெனி மேலாளர். இவரது மகள் அமிர்தவர்ஷினி (வயது 16). இவர் அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் பிளஸ்-1 படித்து வந்தார். கொரோனா தொற்று காரணமாக மாணவி ஆன்லைன் மூலம் வீட்டில் இருந்து கல்வி பயின்று வந்துள்ளார். 

மேலும், மாணவி அமிர்தவர்ஷினி செல்போனில் தனது சக தோழிகளுடன் பேசியும், விளையாடியும் வந்துள்ளார். இதனை தந்தை சிவராமன் கண்டித்துள்ளார்.

கடந்த 5-ந் தேதி மாணவி செல்போனில் விளையாடியதாக கூறப்படுகிறது. இதனால் சிவராமன் அவரை கண்டித்துள்ளார். இதில் மனவேதனை அடைந்த மாணவி இரவில் வீட்டில் இருந்த விஷத்தை குடித்துள்ளார். இதுகுறித்து யாரிடமும் சொல்லாமல் படுக்க சென்றார். மறுநாள் காலையில் மாணவி மயங்கிய நிலையில் கிடப்பதை பார்த்த சிவராமன், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். 

அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக மாணவி சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் நேற்று அமிர்தவர்ஷினி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த திருச்செங்கோடு நகர போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று மாணவி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்