ராஜவல்லிபுரம் சிவன் கோவிலில் 900 ஆண்டுகள் பழமையான கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு
ராஜவல்லிபுரம் சிவன் கோவிலில் 900 ஆண்டுகள் பழமையான கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது.
நெல்லை, ஏப்:
நெல்லையை அடுத்த தாழையூத்து ராஜவல்லிபுரம் சிவன் கோவிலில் பழமையான கல்வெட்டுகள் இருப்பதாக, நெல்லை வரலாற்று பண்பாட்டு ஆய்வு மையத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆய்வு மைய இயக்குனர் மாரியப்பன் மற்றும் நிர்வாகிகள் அந்த கோவிலுக்கு சென்று கள ஆய்வு மேற்கொண்டனர்.
இதுகுறித்து ஆய்வு மைய இயக்குனர் மாரியப்பன் கூறியதாவது:-
இதில் அந்த கோவில் பிற்கால பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டது என்பதும், கோவில் 900 ஆண்டுகள் பழமையானது என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. கோவிலில் உள்ள மூலவர் அக்னீஸ்வரர் கருவறையை சுற்றிலும் கல்வெட்டுக்கள் உள்ளன. இதில் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன், மாறவர்மன் குலசேகர பாண்டியன் ஆகியோரால் கல்வெட்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன. குலசேகர பாண்டியன் தனது 16 மற்றும் 17-ம் ஆண்டு ஆட்சி காலத்தில் கோவிலுக்கு அமுதுபடி சாத்துப்படி செய்வதற்காகவும், நெய்வேத்தியம் செய்வதற்காகவும் நிலங்கள் தானமாக வழங்கப்பட்டதை கல்வெட்டுகள் புலப்படுத்துகின்றன.
ஊரின் பெயர் கீழ் கள கூற்றத்து கீழ் வேம்ப நாட்டு பிரம்மதேயம் ஸ்ரீ வல்லப மங்களத்து ராஜவல்லிபுரத்து உடையார் என குறிப்பிடுகின்றன. இதன் வாயிலாக கீழ் கள கூற்றம் என்பது பெரு நாட்டு பிரிவாகவும், கீழ் வேம்பு நாடு என்பது சிறு நாட்டு பிரிவாகவும், ஸ்ரீவல்லப மங்களம் என்பது பாளையங்கோட்டை பற்றியும் குறிப்பிடுகின்றன. மேலும் கோவில் பிற்கால பாண்டியர் காலத்தை சேர்ந்தது என்பதற்கு சான்றாக இரட்டை மீன்கள் பொறித்த சின்னங்கள் அம்பாள் சன்னதி, சுவாமி சன்னதி முன் மண்டபம், தூண் மண்டபம் ஆகிய இடங்களில் காணப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.