சூலக்கல் மாரியம்மன் கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை
சூலக்கல் மாரியம்மன் கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்று செயல் அலுவலர் தெரிவித்துள்ளார்.;
கிணத்துக்கடவு,
கிணத்துக்கடவு அருகே பிரசித்தி பெற்ற மாரியம்மன், விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும், வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது கொரோனா தொற்று அதிகளவில் பரவி வருவதால் கோவில்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்து சமய அறநிலை துறை உத்தரவிட்டுள்ளது.
இதனையடுத்து சூலக்கல் மாரியம்மன் கோவிலில் நேற்று சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களுக்கு கோவில் சார்பில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இதில் கோவில் செயல் அலுவலர் சுந்தர்ராஜ் கலந்து கொண்டு பக்தர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.
கோவிலுக்குள் நுழையும் முன்பு பக்தர்கள் தங்கள் கைகளை கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்ய வேண்டும். உடல்வெப்பநிலையை பரிசோதனை செய்த பின்னரே பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள், 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை. கோவிலுக்கு வரும் பக்தர்கள் கொரோனா நடவடிக்கைகளை கடைப்பிடித்து ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று கூறினார்.