அய்யர்மலை ரெத்தினகிரீஸ்வரர் கோவில் சித்திரை திருவிழா ஒத்திவைப்பு
கொரோனா 2-வது அலை தீவிரமடைந்துள்ளதால் அய்யர்மலை ரெத்தினகிரீஸ்வரர் கோவில் சித்திரை திருவிழா ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
குளித்தலை
ரெத்தினகிரீஸ்வரர் கோவில்
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அய்யர்மலையில் உள்ள ரெத்தினகிரீஸ்வரர் கோவில் காவிரியின் தென்கரையில் அமையப்பெற்றுள்ள சிவதலங்களில் முதன்மையானது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டு அன்றிலிருந்து 9-வது நாள் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெறும்.
சுமார் 4 அரை கிலோ மீட்டர் சுற்றளவுள்ள இக்கோவில் மலையை சுற்றி இழுக்கப்படும் தேர் 3 நாட்களுக்கு பிறகு நிலையை வந்தடையும். இதன்பிறகு தொடர்ந்து திருவிழா நடைபெற்று மஞ்சள் நீராட்டுடன் திருவிழா முடிவடையும். இந்த திருவிழாவில் குளித்தலை சுற்றுவட்டார பகுதி மட்டுமல்லாது, பல மாநிலங்கள், மாவட்டங்களில் உள்ள இக்கோவில் குடிபாட்டுக்காரர்கள். பக்தர்கள், பொதுமக்கள் என லட்சக்கணக்கானோர் வந்து செல்வார்கள்.
திருவிழா ஒத்திவைப்பு
இந்தநிலையில் கடந்த ஆண்டு கொரோனா நோய்பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு பல்வேறு விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டன. அதில் குறிப்பாக கோவில் திருவிழாக்கள் நடத்த தடைவிதிக்கப்பட்டது. அதன்காரணமாக கடந்த ஆண்டு ரெத்தினகிரீஸ்வரர் கோவில் சித்திரை திருவிழா நடத்தப்படவில்லை. இதனால் இந்தாண்டு ரெத்தினகிரீஸ்வரர் கோவில் சித்திரை திருவிழாவுக்கான ஏற்பாடுகள் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு வந்தது. அதன்படி நேற்று திருவிழாவுக்கான முகூர்த்தக்கால் போட திட்டமிடப்பட்டிருந்தது.
பின்னர் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் 25-ந்தேதி நடைபெற இருந்தது. இந்தநிலையில் கொரோனாவின் 2-ம் அலையின் தீவிரம் காரணமாக வழிபாட்டு தலங்களில் திருவிழாக்கள் நடத்த தமிழக அரசு தடை விதித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்காரணமாக அய்யர்மலை ரெத்தினகிரீஸ்வரர் கோவில் சித்திரை திருவிழா ஒத்தி வைக்கப்படுவதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் ஏமாற்றம்
கொரோனா நோய் பரவல் கட்டுப்பாட்டுக்குள் வந்தபின்னர், கோவில் திருவிழாக்கள் நடத்திக்கொள்ள அரசு அனுமதி அளிக்கும்பட்சத்தில் உரிய ஆலோசனை செய்யப்பட்டு ஒத்தி வைக்கப்பட்டுள்ள திருவிழா மீண்டும் நடத்த வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. கொரோனா காரணமாக கடந்த ஆண்டு இக்கோவிலில் சித்திரை திருவிழா நடத்தப்படாமல் இருந்தது பொதுமக்கள், பக்தர்களிடையே பெறும் ஏமாற்றத்தை தந்திருந்தது. இந்தநிலையில் இந்த ஆண்டும் திருவிழா ஒத்திவைக்கப்படுவதாக வெளியான தகவல் பொதுமக்கள், பக்தர்களிடையே அதிர்ச்சி மற்றும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.