கரூர் மாவட்டத்தில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கரூர் மாவட்டத்தில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.;
கரூர்
2-வது அலை
கொரோனா வைரசின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை கடுமையாக்கி உள்ளது. அவை நேற்று முன்தினம் (சனிக்கிழமை) முதல் நடைமுறைக்கு வந்தது. கரூர் மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் வீட்டை விட்டு வெளியில் வருபவர்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும்.
பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். இல்லையென்றால் அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
அபராதம் விதிப்பு
இந்த பணியில் சுகாதாரத்துறையினர், நகராட்சி மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தின் ஈடுபட்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி தற்போது போலீசாரும் அபராதம் விதிக்கும் பணியை தொடங்கி உள்ளனர். சாலையில் இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் முககவசம் அணியாமல் இருந்தால் அவர்களை மடக்கி பிடித்து ரூ.200 அபராதம் விதிக்கின்றனர்.
அந்த வகையில் நேற்று கரூர் பசுபதிபாளையம், தாந்தோணிமலை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து போலீசார் நின்று கொண்டு முககவசம் அணியாமல் வந்தவர்களை பிடித்து அபராதம் விதித்தனர்.
விழிப்புணர்வு
இதில், கரூர் பஸ் நிலையம் ரவுண்டானா அருகே டவுன் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் நின்று கொண்டு முககவசம் அணியாமல் வந்தவர்களை பிடித்து அபராதம் விதித்தனா. மேலும் நோய் தொற்றின் தாக்கம் குறித்து அவர்களிடம் எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதேபோல், கரூரில் சமூக இடைவெளியை பின்பற்றாத வணிக நிறுவனங்கள் மற்றும் பெரிய கடைகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.