அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் அண்ணாமலைக்கு கொரோனா
அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் கே.அண்ணாமலைக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
க.பரமத்தி,
தமிழக சட்டசபை தேர்தல் கடந்த 6-ந்தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. இதற்கிடையே தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட அ.தி.மு.க., தி.மு.க. வேட்பாளர்கள் பலருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் பலர் பிரசாரத்திற்கு செல்ல முடியாமல் முடங்கினர்.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி பா.ஜ.க. வேட்பாளரும், பா.ஜ.க. மாநில துணைத்தலைவரும், முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியுமான கே.அண்ணாமலை போட்டியிடுகிறார். தேர்தலையொட்டி தொகுதி முழுவதும் அவர் சுற்றுப்பயணம் செய்து தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அவரை ஆதரித்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களும் பிரசாரம் செய்தனர். இந்தநிலையில் தேர்தல் முடிந்ததும் கே.அண்ணாமலை மேற்குவங்காளம் சென்றார். அங்கு பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து விட்டு அவர் சொந்த ஊர் திரும்பினார்.
கொரோனா தொற்று
இந்தநிலையில் கடந்த சில நாட்களாக கே.அண்ணாமலைக்கு காய்ச்சல் ஏற்பட்டு, உடல் சோர்வுடன் காணப்பட்டார். இதையடுத்து அவர் தாமாக முன்வந்து மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து அவர் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் அண்ணாமலையுடன் நெருக்கமாக இருந்தவர்களும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.