சிம்ஸ் பூங்கா சாலையில் உலா வந்த காட்டெருமைகள்

குன்னூரில் சிம்ஸ் பூங்கா சாலையில் காட்டெருமைகள் உலா வந்தன. இதனால் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

Update: 2021-04-11 16:40 GMT
குன்னூர்,

குன்னூரில் இருந்து கோத்தகிரிக்கு செல்லும் சாலையோரத்தில் சிம்ஸ் பூங்கா உள்ளது. இது குன்னூர் பகுதியில் உள்ள மிகச்சிறந்த சுற்றுலா தலமாக கருதப்படுகிறது. இதனருகில் ஹைபீல்டு காப்புக்காடு காணப்படுகிறது. இங்கு குரைக்கும் மான், காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.

கடந்த காலங்களில் காப்புக்காட்டில் பசுந்தீவன தட்டுப்பாடு ஏற்படும் நேரங்களில் அங்கிருந்து வெளியேறும் காட்டெருமைகள் சிம்ஸ் பூங்காவில் புகுவது வாடிக்கையாக இருந்து வந்தது. இதை தடுக்க அங்கு தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டது. இதனால் சிம்ஸ் பூங்காவுக்குள் காட்டெருமைகள் புகுவது இல்லை. எனினும் அங்குள்ள சாலைகளில் காட்டெருமைகள் உலா வருவது வாடிக்கையாக உள்ளது.

இந்த நிலையில் நேற்று காலை 10.30 மணியளவில் காப்புக்காட்டில் இருந்து வெளியேறிய 2 காட்டெருமைகள் சிம்ஸ் பூங்கா எதிரே உள்ள குன்னூர்-கோத்தகிரி சாலையில் உலா வந்தன. 

பரபரப்பு

இதை கண்டு அங்கு நின்றிருந்த பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் பீதி அடைந்தனர். தொடர்ந்து அருகில் உள்ள பாதுகாப்பான இடங்களுக்குள் அலறியடித்து ஓடி சென்று பதுங்கி கொண்டனர். சுமார் 10 நிமிடங்கள் அங்கேயே சுற்றித்திரிந்த காட்டெருமைகள், அதன்பிறகு அருகில் உள்ள காட்டுக்குள் சென்றன. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

மேலும் செய்திகள்