மண்டபம் கடற்கரை பூங்காவில் மறுசீரமைப்பு பணி
மண்டபம் கடற்கரை பூங்காவில் ரூ.20 லட்சம் நிதியில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
பனைக்குளம்,
மண்டபம் கடற்கரை பூங்காவில் ரூ.20 லட்சம் நிதியில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
பூங்கா பராமரிப்பு
மண்டபம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் மண்டபம் கடற்கரை பூங்கா செயல்பட்டு வருகிறது. இந்த பூங்கா கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இந்த பூங்கா சரியான முறையில் பராமரிக் கப்படாததால் குழந்தைகள் விளையாடும் அனைத்து உபகரணங்களும் சேதம் அடைந்ததுடன் பூங்கா பராமரிப்பு இல்லாமல் போனது.
இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவின்பேரில் மண்டபம் பகுதியில் உள்ள கடற்கரை பூங்கா ரூ.20 லட்சம் நிதியில் மீண்டும் மறுசீரமைப்பு மற்றும் ஏராளமான விளையாட்டு உபகரணங்கள் புதிதாக அமைக்கும் பணி கடந்த 2 மாதத்திற்கு மேலாக நடைபெற்று வருகின்றன.
இந்த பணியில் பூங்காவின் நுழைவு பகுதியில் உள்ள கல்லால் வடிவமைக்கப்பட்ட பவளப் பாறைகள் மற்றும் மீன்களின் சிற்பங்களும் சீரமைக்கப்பட்டு புதிய வர்ணம் பூசப்பட்டு வருகின்றன. மேலும் கடல்குதிரை நீரூற்று சேதமடைந்த நிழற்குடை, கழிப்பறை கட்டிடம் உள்ளிட்டவைகளும் சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றன. குழந்தைகளை கவரும் வகையில் கல்லால் ஆன நாரை, பசு, மான், ஒட்டகச்சிவிங்கி, மான், சேவல் உள்ளிட்ட பலவிதமான சிற்பங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
ஆய்வு
மண்டபம் கடற்கரை பூங்காவில் நடைபெற்றுவரும் மறுசீரமைப்பு பணிகளை மண்டபம் பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசி, இளநிலை உதவியாளர் முனியசாமி உள்ளிட்டோர் அவ்வப்போது தொடர்ந்து பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.
இது பற்றி பேரூராட்சி அதிகாரிகள் கூறும்போது, மண்டபம் கடற்கரை பூங்காவில் ரூ.20 லட்சம் நிதியில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. கடற்கரை பூங்கா வரும் சுற்றுலா பயணிகள் அமர்ந்து ஓய்வெடுக்க வசதியாக நிழற்குடைகள் அமைக்கப்பட்டு வருவதுடன் ஆண் மற்றும் பெண்களுக்கு தனியாக கழிப்பறை கட்டிடம் கட்டப்பட்டு வருகின்றன.
சீரமைப்பு பணிகள் இன்னும் 10 நாட்களுக்குள் முடிவடைந்து விடும். மாவட்ட கலெக்டரின் அனுமதியுடன் மண்டபம் கடற்கரை பூங்கா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புதிய உபகரணங்களில் சிறுவர்கள் விளையாடுவதற்கு வழக்கம்போல் அனுமதிக்கப்படுவார்கள். இவ்வாறு அவர்கள் கூறினர்.