கடல்பகுதியில் உளவு பார்க்க வந்தார்களா?
தனுஷ்கோடி வரை வந்த இலங்கை விமானப்படை வீரர்கள் கடல்பகுதியில் உளவு பார்க்க வந்தார்களா என்று மத்திய-மாநில உளவு பரிவு போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.;
ராமேசுவரம்,
இலங்கை விமானப் படையில் பணிபுரியும் ரோசான்அபேசுந்தரே (வயது32) என்ற விமானப்படை வீரர் நேற்றுமுன்தினம் இலங்கை தலைமன்னார் பகுதியில் இருந்து நீந்தியபடி தனுஷ்கோடி அரிச்சல் முனை பகுதிக்கு வருகை தந்தார். தனுஷ்கோடி அரிச்சல்முனை கடல்பகுதி வரை வந்த அவர் மீண்டும் அரிச்சல்முனை பகுதியில் இருந்து நீந்தியபடி தலைமன்னார் பகுதிக்கு திரும்பிச்சென்றார்.
தலைமன்னாரில் இருந்து அரிச்சல் முனை வரை வந்து சென்ற விமான படை வீரருக்கு உதவியாக ஒரு பிளாஸ்டிக் படகு மற்றும் 2 துடுப்பு படகிலும் இலங்கை விமானப் படையில் பணிபுரியும் 20 விமானப்படை வீரர்களும் உதவியாக வருகை தந்தனர். இலங்கை தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை இலங்கை விமானப் படையில் பணிபுரியும் வீரர் ஒருவர் நீந்தி மீண்டும் திரும்பி சென்றுள்ளது அவர் உண்மையிலேயே பாக் நீரிணைப் பகுதியில் நீந்தி சாதனை புரிய வந்தாரா? அல்லது நீச்சல் போர்வையில் அவருடன் வந்த விமானப்படை வீரர்கள் ராமேசுவரம் தனுஷ்கோடி கடல் பகுதி, கடற்கரை பகுதியில் உளவு பார்க்க வந்தார்களா? என்ற சந்தேகமும் மத்திய- மாநில உளவு பிரிவு போலீசாருக்கு எழுந்துள்ளது. எனவே இனிவரும் நாட்களில் தலைமன்னார்-தனுஷ்கோடி இடையே பாக் நீரிணை கடல் பகுதியில் எந்த ஒரு வீரர்கள் நீந்தி சாதனை புரிய அனுமதி கேட்டாலும் அவ்வாறு நீந்தி வரும் வீரர்களுடன் படகில் அரசே ஒரு நடுவரை நியமித்து ஆய்வு செய்ய வேண்டும். கடல் பகுதியில் நீந்தி வருவதன் உண்மைத்தன்மை ஆராயவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.