தாராபுரத்தில் மக்கள் நீதிமன்றம் மூலம் 285 வழக்குகளில் ரூ.6½ கோடிக்கு சமரச தீர்வு
தாராபுரத்தில் மக்கள் நீதிமன்றம் மூலம் 285 வழக்குகளில் ரூ.6½ கோடிக்கு சமரச தீர்வு;
தாராபுரம்
தாராபுரம் வட்ட சட்டப் பணிகள் குழுவின் சார்பில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதற்கு கூடுதல் மாவட்ட நீதிபதி பி.கருணாநிதி தலைமை தாங்கினார். வட்ட சட்டப் பணிக்குழு தலைவர் மற்றும் சார்பு நீதிபதி சி.சசிக்குமார், உரிமையியல் நடுவர் ஏக்னஸ் ஜெப கிருபா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மக்கள் நீதிமன்றம் நடைபெற்றதில் மோட்டார் வாகன விபத்து வழக்குகள் 100, உரிமையியல் வழக்குகள் 183, ஜீவனாம்ச மனு 2 போன்றவைகள் மக்கள் நீதிமன்றத்தின் மூலம் தீர்வு காணப்பட்டது, இதன் மொத்த மதிப்பு ரூ. 6 கோடியே 65 லட்சத்து 38 ஆயிரத்து 838-க்கு மொத்தம் 472 பயனாளிகள் மக்கள் நீதிமன்றத்தின் மூலம் பயன் பெற்றனர். இதில் வக்கீல்கள் மற்றும் பொதுமக்கள் முககவசம் அணிந்து கலந்து கொண்டனர்.