500 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
இடிகரை அருகே வேனில் பதுக்கி வைத்திருந்த 500 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்ததுடன் ஒருவரை கைது செய்தனர்.
இடிகரை
இடிகரை அருகே வேனில் பதுக்கி வைத்திருந்த 500 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்ததுடன் ஒருவரை கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
ரகசிய தகவல்
கோவையை அடுத்த மணியகாரம் பாளையம் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்டு வருவதாக பெரியநாயக்கன்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
புகையிலை பொருட்கள்
அப்போது அங்கு ஒரு வீட்டின் முன்பு ஒரு வேன் சந்தேகத்துக்கு இடமாக நின்றது. அந்த வேனின் பின்புறம் ஒருவர் நின்று கொண்டு ஏதோ பொருட்களை எடுத்துக்கொண்டு இருந்தார்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வேன் நின்ற இடத்துக்கு வந்தனர். அப்போது அந்த வேனுக்குள் பண்டல் பண்டலாக ஏராளமான பொருட்கள் இருந்தன.
உடனே போலீசார் அந்த வேனுக்குள் சென்று சோதனை செய்தபோது, அதற்குள் 18 பெட்டிகள் இருந்தன. அவற்றை பிரித்து பார்த்தபோது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் என்பது தெரியவந்தது.
ஒருவர் கைது
இதையடுத்து போலீசார் அந்த நபரை பிடித்து விசாரணை செய்தபோது, அதேப்பகுதியை சேர்ந்த கங்காதரன் (வயது 40) என்பதும், வெளியூர்களில் இருந்து புகையிலை பொருட்களை வாங்கி வந்து அந்த வே னுக்குள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதும் தெரியவந்தது.
உடனே போலீசார் கங்காதரனை கைது செய்ததுடன், அந்த வேனில் இருந்த 500 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் அந்த வேன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.