45 வயது மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி
45 வயது மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி
மடத்துக்குளம்
மடத்துக்குளம் சுற்றுவட்டார பகுதியில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்கள், முன்னெச்சரிக்கை தடுப்பு பணிகள், சுகாதார ஆலோசனைகள், என தொடர்ந்து 1 வருட காலத்திற்கும் மேலாக நடைபெற்று வருகின்றன. அதன்படி தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதை தொடர்ந்து மடத்துக்குளம் பகுதியில் கொரோனா 2 ம் கட்ட தடுப்பூசியை இப்பகுதியில் உள்ள சுகாதார மையங்களில் போடப்பட்டு வருகிறது.
இதனையடுத்து கடத்தூர் ஊராட்சி பகுதியில் நேற்றுகாலை 7 மணி முதல் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. இந்நிகழ்வு மடத்துக்குளம் வட்டார மருத்துவ அலுவலர் விஜயலட்சுமி தலைமையில் நடைபெற்றது. கடத்தூர் ஊராட்சி பகுதியில், கொரோனா தடுப்பூசி செலுத்தவதற்காக, சுகாதார மையத்தில் பணியாற்றும் செவிலியர்கள், கடத்தூர் ஊராட்சி பகுதியில் வீடுவீடாக சென்று, கொரோனா குறித்த பொதுமக்களிடம் உள்ள அச்சத்தை போக்கி, கொரோனா தடுப்பூசியின் பயன்களை எடுத்துக் கூறி, அழைத்து வந்து தடுப்பூசி போட்டனர். இன்று முதல், கணியூர் அரசு துணை சுகாதார நிலையத்தில் தொடர்ந்து கொரோனா தடுப்பூசி போடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.