பல்லடம் அருகே 2 கார்கள் மீது லாரி மோதிய கோர விபத்தில் காரில் பயணம் செய்த என்ஜினீயர் தனது மனைவி, மகளுடன் பலியானார்
பல்லடம் அருகே 2 கார்கள் மீது லாரி மோதிய கோர விபத்தில் காரில் பயணம் செய்த என்ஜினீயர் தனது மனைவி, மகளுடன் பலியானார்
பல்லடம்
பல்லடம் அருகே 2 கார்கள் மீது லாரி மோதிய கோர விபத்தில் காரில் பயணம் செய்த என்ஜினீயர் தனது மனைவி, மகளுடன் பலியானார். குடும்பத்தை பெங்களூருவுக்கு அழைத்து சென்ற போது இந்த பரிதாப சம்பவம் நடந்து விட்டது. இந்த விபத்தில் மேலும் 2 பேர் காயம் அடைந்தனர்.
இது குறித்து போலீ்ஸ் தரப்பில் கூறப்படுவதாவது
கணினி என்ஜினீயர்
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள வல்லக்குண்டாபுரத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன் கணினி என்ஜினீயர். இவர் பெங்களூருவில் அறை எடுத்து தங்கி இருந்து அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கணினி என்ஜினீயராக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி சரண்யா. இவர்களது மகள் கனிகா இவர்கள் 2 பேரும் வல்லக்குண்டாபுரத்தில் வசித்து வந்தனர். கனிகா அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தாள்.
இந்த நிலையில் கார்த்திகேயன் தனது குடும்பத்தை பெங்களூருவுக்கு மாற்ற முடிவு செய்தார். இதற்காக பெங்களூருவில் வாடகை வீடு ஒன்றை பார்த்து முன்பணம் கொடுத்து தயாராக வைத்திருந்தார். அதைத்தொடர்ந்து கார்த்திகேயன், தனது மனைவி மற்றும் மகளை பெங்களூருவுக்கு அழைத்து செல்ல முடிவு செய்து வல்லக்குண்டாபுரம் வந்தார். பின்னர் ஒரு காரில் கார்த்திகேயன், அவருடைய மனைவி சரண்யா மற்றும் மகள் கனிகா ஆகியோருடன் நேற்று காலை பெங்களூருவுக்கு புறப்பட்டார். காரை கார்த்திகேயன் ஓட்டிச்சென்றார்.
லாரி மோதியது
இவர்களுடைய கார் நேற்று காலை 9.30 மணிக்கு திருப்பூர்-பல்லடம் தேசிய நெடுஞ்சாலை வழியாக பல்லடம் நோக்கி வந்து கொண்டிருந்தது. பல்லடத்தை அடுத்த காமநாயக்கன்பாளையம், போலீஸ் நிலையம் அருகே வந்த போது, இவர்களது காருக்கு முன்னால் மற்றொரு கார் சென்று கொண்டிருந்தது. அந்த காரில் கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த பூவரசன் அவருடைய தாயார் மாரியம்மாள் ஆகியோர் இருந்தனர். இந்த காரை பூவரசன் ஓட்டி வந்துள்ளார்.
அப்போது எதிரே நாமக்கல்லில் இருந்து பொள்ளாச்சி நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்த நடராஜன் என்பவரது மகன் கதிரவன் என்பவர் ஓட்டி வந்துள்ளார். கண் இமைக்கும் நேரத்தில் அந்த லாரி பூவரசன் ஓட்டி வந்த காரின் முன்பக்க வாட்டில் மோதி நிற்காமல், அதற்கு பின்னால் கார்த்திகேயன் ஓட்டி வந்த கார் மீது பயங்கரமாக மோதியது.
3 பேர் பலி
இந்த வேகத்தில் கார்த்திகேயன் ஓட்டிவந்த கார் லாரியின் முன்பகுதிக்குள் புகுந்தது. இந்த விபத்தில் கார் அப்பளம்போல் நொறுங்கி உருக்குலைந்து சின்னாபின்னமானது. இந்த விபத்தில் காரில் இருந்த கார்த்திகேயன், அவருடைய மனைவி சரண்யா, இவர்களுடைய மகள் கனிகா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள். பொள்ளாச்சியில் இருந்து காரை ஓட்டி வந்த பூவரசன் மற்றும் அவருடைய தாயாா் மாரியம்மாள் ஆகியோர் காயம் அடைந்தனர்.
இதற்கிடையில் கார்கள் மீது லாரி மோதிய சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். விபத்து காரணமாக அந்த பகுதியில் சிறிது போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து உடனடியாக காமநாயக்கன்பாளையம் போலீசார் மற்றும் பல்லடம் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசாரும் தீயணைப்பு வீரர்களும் விரைந்து வந்து, விபத்தில் பலியானவர்களை மீட்க முயன்றனர். ஆனால் லாரியின் அடியில் கார் சிக்கிக்கொண்டதால், காருக்குள் இருந்த உடல்களை அவர்களால் மீட்க முடியவில்லை.
போலீசார் விசாரணை
இதையடுத்து பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டது. அந்த எந்திரம் மூலம் லாரியின் அடியில் சிக்கிய கார் பிரித்து வெளியே எடுக்கப்பட்டது. அதன்பின்னர் காருக்குள் உயிரிழந்த நிலையில் கிடந்த கார்த்திகேயன், சரண்யா, கனிகா ஆகியோர்களின் உடல்களை மீட்டனர். இந்த உடல்களை வெளியே எடுக்க மட்டும் 2 மணி நேரமானது. பின்னர் மீட்கப்பட்ட உடல்களை பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பிவைத்தனர்.
மேலும் காயம் அடைந்த பூவரசன் மற்றும் அவருடைய தாயார் மாரியம்மாள் ஆகிய 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு தாயும், மகனும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த விபத்து குறித்து காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் கதிரவனை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் அவர் மதுபோதையில் லாரியை ஓட்டி வந்தது தெரியவந்தது.
வளைவான பகுதி
விபத்து நடந்த இடம் வளைவான பகுதியாகும். அது ஏற்கனவே விபத்துகள் நடந்த பகுதியாகும். மேலும் சாலையின் இருபுறமும் அபாய வளைவு என எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டுள்ளது. சரியாக கவனிக்காமல் லாரி ஓட்டுனர் அஜாக்கிரதையாக வந்து கார் மீது மோதியதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.