வீராணம் ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்
வீராணம் ஏரியில் உள்ள மீன்கள் செத்து மிதக்கின்றன.
காட்டுமன்னார்கோவில்,
காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் உள்ளது வீராணம் ஏரி. இந்த ஏரி கடலூர் மாவட்டத்தின் முக்கிய நீர்ஆதாரமாக விளங்கி வருகிறது. ஏரிக்கு சாதாரண காலங்களில் கீழணையில் இருந்து வடவாறு வழியாகவும், மழைக்காலங்களில் வீராணம் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்கின்ற மழைநீர் செங்கால் ஓடை, கருவாட்டு ஓடை, வெண்ணங்குழி ஓடை வழியாகவும் தண்ணீர் வரும். இந்த ஏரியின் மூலம் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளை நிலங்கள் பாசனம் பெறுகிறது. மேலும் சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக வீராணம் ஏரியின் நீர் மட்டத்துக்கு ஏற்ப வினாடிக்கு 60 கன அடி தண்ணீர் அனுப்பப்படுகிறது.
இந்த நிலையில் வீராணம் ஏரியில் ரூ.75 கோடியில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக வீராணம் ஏரியின் நீர்மட்டத்தை அதிகாரிகள் குறைத்து வருவதாலும், சுட்டெரிக்கும் வெயிலாலும் ஏரியில் தண்ணீர் குறைந்து வருகிறது.
துர்நாற்றம்
மேலும் சென்னைக்கு குடிநீர் தேவைக்காக கடந்த 10 நாட்களாக மாற்று இடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு, தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. இதற்கிடையே மீன்வளத்துறை சார்பில் உள்நாட்டு மீனவர்கள் பயனடையும் வகையில், மீன்குஞ்சுகள் விடப்பட்டிருந்தன. இந்த நிலையில் தற்போது ஏரியில் உள்ள மீன்கள் செத்து மிதக்கின்றன. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகையில், வீராணம் ஏரியின் நீர்மட்டம் குறைந்து வருவதால் ஏரியில் விடப்பட்டிருந்த மீன்கள் செத்து மிதந்து வருகின்றன. எனவே இங்குள்ள மீன்களை பிடித்து அதிகளவு தண்ணீர் இருக்கும் இடங்களில் கொண்டு சென்று விட வேண்டும் என்றனர்.