தேயிலைத்தூள் விலை கிலோவுக்கு ரூ.3 வீழ்ச்சி

குன்னூர் ஏல மையத்தில் தேயிலைத்தூள் விலை கிலோவுக்கு ரூ.3 வீழ்ச்சி ஏற்பட்டது.

Update: 2021-04-11 15:02 GMT
குன்னூர்,

நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. விவசாயிகள் தங்களது தோட்டங்களில் பறிக்கும் பச்சை தேயிலையை தொழிற்சாலைகளுக்கு வினியோகித்து வருமானம் ஈட்டுகின்றனர். தொடர்ந்து தொழிற்சாலைகளில் தேயிலைத்தூள் தயாரிக்கப்படுகிறது. இந்த தேயிலைத்தூள், குன்னூரில் உள்ள ஏல மையம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. 

தேயிலைத்தூள் ஏலம்

இங்கு வாரந்தோறும் வியாழன், வெள்ளி ஆகிய 2 நாட்கள் தேயிலை வர்த்தகர் அமைப்பு சார்பில் ஆன்லைன் மூலம் ஏலம் நடைபெறுகிறது. இந்த ஏலத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தகர்கள் கலந்துகொண்டு தேயிலைத்தூளை ஏலம் எடுக்கின்றனர். தேயிலை வர்த்தகர் அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் மட்டுமே ஏலத்தில் கலந்துகொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 

அதன்படி கடந்த 8, 9-ந் தேதிகளில் தேயிலைத்தூள் ஏலம்(விற்பனை எண்-14 ) நடைபெற்றது. இந்த ஏலத்துக்கு 16 லட்சத்து 63 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் விற்பனைக்கு வந்தது. அதில் 12 லட்சத்து 34 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் இலை ரகமாகவும், 4 லட்சத்து 29 ஆயிரம் கிலோ டஸ்ட் ரகமாகவும் இருந்தது.

விலை வீழ்ச்சி

இந்த ஏலத்தில் 13 லட்சத்து 65 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் விற்பனையானது. இது 83 சதவீத விற்பனை ஆகும். விற்பனையான தேயிலைத்தூளின் ரொக்க மதிப்பு ரூ.16 கோடியே 6 லட்சம். அனைத்து தேயிலைத்தூள் ரகங்களுக்கும் கிலோவுக்கு ரூ.3 விலை வீழ்ச்சி ஏற்பட்டது. 

சி.டி.சி. தேயிலைத்தூளின் அதிகபட்ச விலை கிலோவுக்கு ரூ.347, ஆர்தோடக்ஸ் தேயிலைத்தூளின் அதிகபட்ச விலை கிலோவுக்கு ரூ.285 என இருந்தது. சராசரி விலையாக இலை ரக சாதாரண வகை கிலோவுக்கு ரூ.97 முதல் ரூ.101 வரை, உயர் வகை கிலோவுக்கு ரூ.213 என ஏலம் போனது. 

டஸ்ட் ரக சாதாரண வகை கிலோவுக்கு ரூ.106 முதல் ரூ.108, உயர் வகை கிலோவுக்கு ரூ.150 முதல் ரூ.215 என விற்பனையானது. அடுத்த ஏலம்(விற்பனை எண்-15) வருகிற 15, 16-ந் தேதிகளில் நடைபெறுகிறது. அந்த ஏலத்துக்கு 18 லட்சத்து 65 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் விற்பனைக்கு வருகிறது.

மேலும் செய்திகள்