கொடைக்கானலில் சாரல்மழையில் நனைந்தபடி படகு சவாரி செய்த சுற்றுலா பயணிகள்

கொடைக்கானலில் சாரல்மழையில் நனைந்தபடி சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்தனர்.

Update: 2021-04-11 14:18 GMT

கொடைக்கானல்:
மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் தற்போது குளு, குளு சீசன் நிலவுகிறது. இதனை அனுபவிக்க சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது. குறிப்பாக தொடர் விடுமுறை காரணமாக கடந்த 2 நாட்களாக பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தருகின்றனர்.
இதனிடையே நேற்று காலை முதல் லேசான வெப்பம் நிலவிய நிலையில் பிற்பகலில் மேகமூட்டங்கள் சூழ்ந்து மாலை 5 மணி முதல் சுமார் ஒரு மணிநேரம் நகரின் பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்தது. வனப்பகுதியில் உள்ள சுற்றுலா இடங்களில் மிதமான மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து இதயத்தை வருடும் இதமான சீதோஷ்ணம் நிலவியது. அவ்வப்போது மேக மூட்டங்கள் தரையிறங்கி மலை முகடுகளை முத்தமிட்டன. இதனை கண்ட சுற்றுலா பயணிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். 
தரையிறங்கிய மேகமூட்டத்தின் பின்னணியில் நட்சத்திர ஏரியில், சாரல் மழையில் நனைந்தபடி சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்தனர். மேலும் ஏரிச்சாலையில் சைக்கிள் சவாரி, குதிரை சவாரி போன்றவற்றில் உற்சாகமாக ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்