பழனியில் கொட்டி தீர்த்த மழை கடைகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் வியாபாரிகள் அவதி
பழனியில் கொட்டி தீர்த்த மழையால் கடைகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் வியாபாரிகள் அவதி அடைந்தனர்.
பழனி:
பழனியில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் நிலவி வந்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் பழனி முருகன் கோவிலுக்கு வந்த பக்தர்கள் கடும் அவதி அடைந்து வந்தனர்.
வெயில் காரணமாக சாலையோரங்களில் இளநீர் கடைகள், தர்பூசணி விற்பனை கடைகள் புற்றீசல் போல் முளைத்துள்ளன. அங்கு மக்கள் சென்று தாகம் தணித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று அதிகாலை 5 மணி அளவில் பழனி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இந்த மழையால் தாழ்வான இடங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. அதேபோல் பள்ளமான இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது.
பழனி பஸ்நிலைய பகுதியில் மழைநீருடன் சாக்கடை கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடியது. இவை கடைக்குள் புகுந்ததால் காலையில் கடையை திறக்க வந்த வியாபாரிகள் கடும் அவதி அடைந்தனர். இதையடுத்து மழைநீரை வெளியே இறைத்து ஊற்றிய பின்னரே வியாபாரிகள் வியாபாரம் செய்ய முடிந்தது.
இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், மழைநீருடன் சாக்கடை கழிவுநீர் கலந்து கடைக்குள் புகுந்ததால் சுமார் ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமானது என்றனர்.