சிங்காரப்பேட்டையில் சரக்கு வேனில் கடத்திய 1,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல் - டிரைவர் கைது
சிங்காரப்பேட்டையில் சரக்கு வேனில் கடத்திய 1,000 லிட்டர் எரிசாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
கல்லாவி,
கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை வழியாக சரக்கு வாகனத்தில் எரிசாராயம் கடத்துவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க அவர் போலீசாருக்கு உத்தரவிட்டார்.
அதன்பேரில் சிங்காரப்பேட்டையில் போலீசார் திருவண்ணாமலை- கிருஷ்ணகிரி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திருவண்ணாமலை பக்கம் இருந்து சிங்காரப்பேட்டை நோக்கி வந்த சரக்கு வேனை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது அதில் கேன்களில் 1,000 லிட்டர் எரிசாராயம் இருந்தது. இதையடுத்து போலீசார் வேன் டிரைவரிடம் விசாரணை நடத்தினர். அவர் செஞ்சி தாலுகா விநாயகபுரம் கிராமத்தை சேர்ந்த நடராஜ் (வயது 25) என்பதும், திருவண்ணாமலையில் இருந்து எரிசாராயம் கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் எரிசாராயம் மற்றும் சரக்கு வேனை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து சிங்காரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவர் நடராஜை கைது செய்தனர்.