தளவாய்ப்பட்டணத்தில் காளியம்மன் கோவில் தேரோட்டம்
தளவாய்ப்பட்டணத்தில் காளியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.
தாராபுரம்,
தாராபுரம் அருகே உள்ள தளவாய்ப்பட்டணத்தில் பிரசித்திபெற்ற காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா கடந்த வாரம் பூச்சாட்டுதலுடன் ஆரம்பித்தது. அதைத்தொடா்ந்து அம்மனுக்கு தினமும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. மேலும் பக்தா்கள் பூவோடு எடுத்து நோ்த்திக்கடன் செலுத்தினா். இந்த நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்ட நிகழ்ச்சி நேற்று நடைபெறுவதாக இருந்தது. ஆனால் தமிழகத்தில் கொரோனா பரவல் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்ததால் தேரோட்டம் நடத்த கூடாது என அதிகாாிகள் தொிவித்தனா்.
அதனை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் நேற்றுமுன்தினம் சுமாா் 300-க்கும் மேற்பட்டோா் தாராபுரம்-உடுமலை ரோட்டில் சாலை மறியல் செய்தனா். அதைத்தொடா்ந்து அங்கு வந்த அதிகாாிகள் மற்றும் போலீசாா் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். அப்போது நிபந்தனைகளுடன் தேரோட்டம் நடத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. அதைத்தொடா்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா். அதனையடுத்து திருவிழாவின் இறுதிநாள் நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று மாலை 5.15 மணிக்கு நடைபெற்றது. அப்போது திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனா். அங்குள்ள முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த தோ் இரவு 7 மணிக்கு நிலையை அடைந்தது.