அரக்கோணம் படுகொலையை கண்டித்து பவானியில் விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்- தடையை மீறி போராடியதால் அனைவரும் கைது

அரக்கோணம் இரட்டை படுகொைலயை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.

Update: 2021-04-10 23:11 GMT
பவானி 
அரக்கோணம் இரட்டை படுகொைலயை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். 
இரட்டை கொலை
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியில் இரு சமூகத்திற்கு இடையே ஏற்பட்ட மோதலில் இரட்டை  கொலை நடந்தது.
இதை கண்டித்து தமிழகம் முழுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், 2 பேரை இழந்த குடும்பத்திற்கு அரசு வேலை வழங்கவேண்டும். ஒவ்வொரு குடும்பத்திற்கும்       இழப்பீடாக   தலா ரூ.1 கோடி வழங்கவேண்டும். கொலைக்கு காரணமானவர்களை கைது செய்யவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
ஆர்ப்பாட்டம்
அதன்படி பவானியில் அந்தியூர் பிரிவு சாலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். 
ஈரோடு வடக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயலாளர் சிறுத்தை வள்ளுவன் ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட செயலாளர் அம்பேத்கர்,  இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர்கள் வக்கீல் ப.பா.மோகன், மாதேஸ்வரன், தி.மு.க. நகர செயலாளர் நாகராஜன், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்ட செயலாளர் பழனிச்சாமி, த.மு.மு.க மாவட்ட செயலாளர் முகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கைது
காங்கிரஸ் கட்சியின் நகர தலைவர் கதிர்வேல், தந்தை பெரியார் திராவிடர் கழகம் வேணுகோபால் உள்பட பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார்கள்.
கொரோனா விதிமுறைகளை மீறி கூட்டத்தை கூட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பவானி போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்தார்கள். 

மேலும் செய்திகள்