கொரோனா பரவுவதை தடுக்க 23 கட்டுப்பாட்டு பகுதிகள் அறிவிப்பு; கலெக்டர் கதிரவன் பேட்டி
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவுவதை தடுக்க 23 கட்டுப்பாட்டு பகுதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் கூறினார்.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவுவதை தடுக்க 23 கட்டுப்பாட்டு பகுதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் கூறினார்.
முக கவசம்
கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. எனவே கொரோனா பரவுவதை தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் முக கவசம் அணிய வேண்டும் என்றும், தனிநபர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் தொடர்ந்து அறிவுறுத்தப்படுகிறது. இதுகுறித்து ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. முக கவசம் அணியாமல் வந்தாலும், பொது இடத்தில் எச்சில் துப்பினாலும் அபராதம் விதிக்கப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் முக கவசம் அணியாமல் வெளியில் வந்த 1,981 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
தடுப்பூசி இருப்பு
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசிகள் போதுமான அளவு இருப்பு உள்ளது. 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு, தொழிலாளர்கள் வேலை செய்யும் இடத்துக்கே சென்று தடுப்பூசி போடப்படுகிறது. மீன் மார்க்கெட்டுகளுக்கு ஞாயிற்றுக்கிழமை தோறும் விடுமுறை அளிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. கறிக்கடைகளில் வெட்டிய கறியை பாக்கெட் செய்து வழங்க வேண்டும். கூட்டம் சேர விடாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
புதிய வகை கொரோனா தமிழகம் முழுவதும் பரவி உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட 23 இடங்கள் கட்டுப்பாட்டு பகுதியாக சுகாதாரத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. அங்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. மக்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
சிகிச்சை மையம்
தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு கொரோனா தாக்கம் ஏற்படலாம். ஆனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் நுரையிரல் பாதிப்பு ஏற்படுவது தடுக்கப்படும். கொரோனா சிகிச்சை மையமாக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி மட்டும் செய்யப்பட்டு வருகிறது. அங்கு 500 பேருக்கு சிகிச்சை அளிக்கும் வசதி உள்ளது. ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கலாமா? என்று மருத்துவ குழுவினருடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு கலெக்டர் சி.கதிரவன் கூறினார்.