ஆப்பக்கூடல் அருகே ஜோதிடர் கொலை வழக்கில் 3 பேர் கைது

ஆப்பக்கூடல் அருகே நடந்த ஜோதிடர் கொலை வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-04-10 23:09 GMT
அந்தியூர்
ஆப்பக்கூடல் அருகே நடந்த ஜோதிடர் கொலை வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்காதல்
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள ஆப்பக்கூடல் வள்ளியூரை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 42). அவருடைய மனைவி சரோஜா (40). இவர்களுக்கு 2 மகன்களும், அனிதா (21) என்ற மகளும் உள்ளனர். 
கவுந்தப்பாடி ஆலந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (48). ஜோதிடர். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இந்திரா என்ற மனைவியும், தினேஷ் என்ற மகனும், தீபா என்ற மகளும் உள்ளனர்.
 கடந்த 2½ ஆண்டுகளுக்கு முன்பு சரோஜாவின் கணவர் பழனிச்சாமி திடீரென இறந்துவிட்டார். இதனால் ஜோதிடர் பழனிச்சாமி அடிக்கடி சரோஜாவின் வீட்டுக்கு சென்று அவருக்கு ஆறுதல் கூறி வந்துள்ளார். நாளடைவில் 2 பேருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. 
கத்திக்குத்து
இந்தநிலையில் சரோஜாவின் மகள் அனிதா தன்னுடைய தாயிடம் சென்று தனக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்து தருமாறு கேட்டார். 
அவருடன் அனிதாவின் சித்தப்பா தெய்வராஜ் என்கிற சென்னாநாயக்கர், அவருடைய மகன் சூரிய பிரகாஷ் மற்றும் உறவினர்கள் குமார் (32), பிரகாஷ் (35) மற்றும் சரோஜாவின் அண்ணன் கோவிந்தராஜ் (47) ஆகியோரும் உடன் சென்றிருந்தார்கள். 
அப்போது அங்கு வந்த ஜோதிடர் பழனிச்சாமி சரோஜாவை தாக்கியதாக தெரிகிறது. இதைப்பார்த்த சென்னாநாயக்கர், சூரியபிரகாஷ், குமார், பிரகாஷ், கோவிந்தராஜ் ஆகியோர் பழனிச்சாமியை கண்டிக்க அவர் ஆத்திரம் அடைந்து அனைவரையும் கத்தியால் குத்தியுள்ளார். 
கல்லால் அடித்து கொலை
இதனால் ஆத்திரம் அடைந்த சென்னாநாயக்கர் அருகே கிடந்த கல்லை எடுத்து பழனிச்சாமிைய தாக்கியதாக கூறப்படுகிறது.
  இதில் தலையில் படுகாயம் அடைந்து கீழே விழுந்த ஜோதிடர் பழனிச்சாமி சிறிது நேரத்தில் இறந்துவிட்டார். .
3 பேர் கைது
இதுகுறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து  விசாரணை நடத்தினர். இந்த கொலை தொடர்பாக சரோஜாவின் அண்ணன் கோவிந்தராஜ், பிரகாஷ், குமார் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தார்கள். பின்னர் 3 பேரையும் பவானி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். நீதிபதி 3 பேரையும் கோபி மாவட்ட சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்பேரில் 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
மேலும் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய  சென்னாநாயக்கர் அவருடைய மகன் சூரியபிரகாஷ் 2 பேரும் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சிகிச்சைக்குப்பின் அவர்கள் இருவரும் கைது செய்யப்படுவார்கள். என்று போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்