சங்கரன்கோவிலில் ஓய்வுபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரிடம் ரூ.3 லட்சம் மோசடி செய்யப்பட்டது.
சங்கரன்கோவிலில் ஓய்வுபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரிடம் ரூ.3 லட்சம் மோசடி செய்யப்பட்டது.
சங்கரன்கோவில், ஏப்:
சங்கரன்கோவிலில் ஓய்வுபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரிடம் ரூ.3 லட்சம் மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான தாய்-மகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
ஓய்வுபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்
சங்கரன்கோவில் ரெயில்வே பீடர் சாலையில் வசித்து வருபவர் கருணா (வயது 60). இவர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சங்கரன்கோவில் சங்குபுரம் 3-வது தெருவில் உள்ள பழைய வீட்டை விலைக்கு வாங்க திட்டமிட்டார்.
அப்போது அந்த வீட்டின் உரிமையாளர் என்று கூறிய சங்கரன்கோவில்- திருவேங்கடம் ரோடு பகுதியைச் சேர்ந்த கணபதி மனைவி சுப்புலட்சுமியிடம் கருணா முன்பணமாக ரூ.3 லட்சம் வழங்கினார். பணத்தை பெற்று கொண்ட சுப்புலட்சுமி, அந்த வீட்டில் தனது உறவினர் 3 ஆண்டுகள் வசிப்பார் என்றும், அதன் பின்னர் வீட்டை கருணாவுக்கு விற்பதாக கூறினார்.
ரூ.3 லட்சம் மோசடி
இந்த நிலையில் 3 ஆண்டுகளுக்கு பின்னரும் சுப்புலட்சுமி அந்த வீட்டை கருணாவுக்கு விற்பனை செய்யவில்லை. மேலும் பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை. தொடர்ந்து சுப்புலட்சுமி அந்த வீட்டை மேலநீலிதநல்லூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் கருணாவுக்கு அடமானமாக எழுதி கொடுத்தார்.
இந்த நிலையில் அந்த வீடு மற்றொருவரின் பெயரில் இருந்தது தெரிய வந்தது. இதனால் போலி ஆவணம் மூலம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கருணா தனது ரூ.3 லட்சத்தை திருப்பி தருமாறு சுப்புலட்சுமியிடம் கேட்டார். ஆனால் அவர் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை.
வாலிபர் கைது
இதுகுறித்த புகாரின்பேரில், சுப்புலட்சுமி, அவருடைய மகன் மணிகண்டன் (30), மகள் இந்துமதி ஆகிய 3 பேர் மீது சங்கரன்கோவில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதுதொடர்பாக மணிகண்டனை கைது செய்த போலீசார், தலைமறைவான சுப்புலட்சுமி, இந்துமதி ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர்.