காரைக்குடியில் இசை, நாடக கலைஞர்கள் ஊர்வலம்

கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தக்கோரி காரைக்குடியில் இசை, நாடக கலைஞர்கள் ஊர்வலம் நடந்தது.

Update: 2021-04-10 19:34 GMT
காரைக்குடி,

கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தக்கோரி காரைக்குடியில் இசை, நாடக கலைஞர்கள் ஊர்வலம் நடந்தது.

அவசர கூட்டம்

காரைக்குடி இசை, நாடக சங்கத்தின் அவசர கூட்டம் 100 அடி சாலையில் உள்ள சங்க அலுவலகத்தில் அதன் தலைவர் பி.எல். காந்தி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் நூற்றுக்கணக்கான இசை, நாடக கலைஞர்கள், ஒலி, ஒளி அமைப்பாளர்கள் மற்றும் இத்தொழில் சார்ந்த தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், கொரோனா தொற்றால் அரசு அறிவித்துள்ள அவசர நடவடிக்கையில் இருந்து நமது சங்கத்தினருக்கு தளர்வுகள் தரப்பட வேண்டும். அதை அரசிடம் வலியுறுத்த வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. அதனையொட்டி அனைவரும் மீண்டும் புதிய பஸ் நிலையத்தில் ஒன்று கூடினர்.

ஊர்வலம்

 அங்கிருந்து சங்கத்தலைவர் பி.எல்.காந்தி மற்றும் நிர்வாகிகள் தலைமையில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டு, கோரிக்கைகள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக தாலுகா அலுவலகம் சென்றனர். அங்கு தாசில்தார் அந்தோணிராஜிடமும் பின்னர் காரைக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அருணிடமும் கோரிக்கை மனுவை அளித்தனர்.
அந்த கோரிக்கை மனுவில் கூறி இருப்பதாவது:-
கடந்த ஆண்டு கொரோனா ஒழிப்பால் அரசு அறிவித்த அவசர நடவடிக்கைகளால் எங்கள் தொழில் முற்றிலும் முடங்கிப்போனது. வாழ்வாதாரத்திற்கே வழிவகையின்றி தவித்தோம். வறுமையால் சக தோழர்களை இழந்தோம். ஒரு சில குடும்பங்கள் உருக்குலைந்து போயின. இப்பிரச்சினை முடிவுக்கு வந்த நேரத்தில் தேர்தல் அறிவிப்பு வந்து எங்கள் நிகழ்ச்சிகளுக்கான தடை மீண்டும் நீடிக்கப்பட்டது.தேர்தல் முடிந்தது.விடிவு பிறந்தது என நினைத்தோம். ஆனால் மீண்டும் கொரோனா காரணமாக அரசு சில அவசர உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. தொடர்ந்து 1½ ஆண்டுகளாக நாங்கள் தொழில் செய்ய முடியாமல், குடும்பத்தை காப்பாற்ற முடியாமல் முதியோர்களுக்கு மருத்துவ உதவி கூட செய்ய முடியாமல் வாழ வழி நிற்கும் நேரத்தில் மேலும் பாதிப்புக்களை தாங்கும் சக்தி எங்களில் எவருக்கும் இல்லை.ஆதலால் அரசு எங்களுக்கு சில தளர்வுகளை தந்து எங்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற உதவ வேண்டும். கோவில் திருவிழாக்கள், கூத்து நாடகங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

மேலும் செய்திகள்