திருச்சியில் நூறாண்டு பழமையான ‘யூனியன் கிளப்’ இடிப்பு

மது விருந்து, சூதாட்டம் எதிரொலியாக ‘சீல்’ வைக்கப்பட்ட நூறாண்டு பழமையான ‘தி யூனியன் கிளப்’பை இடிக்கும் பணியை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டது.

Update: 2021-04-10 19:32 GMT
திருச்சி
‘தி யூனியன் கிளப்’
திருச்சி கண்டோன்மெண்ட் பாரதிதாசன் சாலையில், திருச்சி மேற்கு தாலுகா அலுவலகம் அருகில் நகரின் மையப்பகுதியில் மாவட்ட வருவாய்த்துறைக்கு சொந்தமான 1½ ஏக்கர் பரப்பளவு நிலத்தில் ‘தி சிட்டி யூனியன் கிளப்’ ஆங்கிலேயர் ஆட்சிக்காலமான 1907-ம் ஆண்டு கட்டப்பட்டது. நூறாண்டுகள் பழமையான கட்டிடமான விலை உயர்ந்த மரங்களால் ஆன தூண்கள், எந்த காலகட்டத்திலும் குளிர்ச்சி நிலவும் சீதோஷ்ணம் என அனைத்தையும் ஒருங்கே பெற்றது.
சமூகம் சார்ந்த நிகழ்வுகளுக்காக பயன்படுத்தும் வகையில் ‘தி யூனியன் கிளப்’ செயல்பட்டு வந்தது. தொழில் அதிபர்கள், முக்கிய பிரமுகர்கள் யூனியன் கிளப்பில் தலைவர், செயலாளர் மற்றும் உறுப்பினர்கள் ஆண்டுக்கு ஒருமுறை தேர்வு செய்யப்பட்டு நிர்வகித்து வந்தனர். 1907-ம் ஆண்டு முதல் இது நடைமுறையில் இருந்து வருகிறது. மாதந்தோறும் வாடகை நிர்ணயம் செய்யப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்க வேண்டும்.
ரூ.9 கோடி வாடகை நிலுவை
இந்த யூனியன் கிளப் கட்டிடத்தில் டென்னிஸ், பில்லியார்ட்ஸ், ஸ்னூக்கர், டேபிள் டென்னிஸ் உள்ளிட்ட விளையாட்டுகள் மாநில, இந்திய மற்றும் சர்வதேச அளவில் நடத்தப்பட்டு வந்தது. இப்படி பல்வேறு சிறப்புகளை கொண்டது.
இந்த நிலையில் கடந்த 1971-ம் ஆண்டு முதல் யூனியன் கிளப் நிர்வாகிகள், மாதந்தோறும் நிர்ணயிக்கப்பட்ட வாடகையை அதன் நிர்வாகிகள் மாவட்ட வருவாய்த்துறைக்கு முறையாக செலுத்தவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. வாடகை நிலுவைத்தொகை மட்டும் ரூ.9 கோடி வைத்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மாவட்டம் நிர்வாகம் தரப்பில், நிலுவை வாடகை தொகையை செலுத்தக்கோரி பலமுறை நோட்டீஸ் அனுப்பியும், கிளப் நிர்வாகிகள் தரப்பில் பதில் தெரிவிக்கப்பட வில்லை. மாறாக கிளப் நிர்வாகிகள் தரப்பில், கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இது வருவாய்த்துறையினருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
மது விருந்து, சூதாட்டம்
இந்த நிலையில் கொரோனா காலக்கட்டத்தில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு, யூனியன் கிளப்பில் பணம் வைத்து சூதாட்டம் ஆடியதுடன் மது விருந்தும் நடத்தப்பட்டது. இது தொடர்பாக வருவாய்த்துறையினர் திருச்சி செஷன்ஸ் கோர்ட்டு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் இருவர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் மாவட்ட வருவாய் அதிகாரி பழனிகுமார் முன்னிலையில் யூனியன் கிளப் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டது. தொடர்ந்து சட்டசபை தேர்தலுக்கான பணிகள் தொடர்ந்து நடந்ததால் யூனியன் கிளப் பக்கம் அதிகாரிகள் கவனம் செலுத்தவில்லை. தற்போது தேர்தல் முடிந்துவிட்ட நிலையில் சர்ச்சையில் சிக்கியுள்ள ‘தி யூனியன் கிளப்’-பை இடிக்க முடிவு செய்யப்பட்டது.
இடிக்கும் பணி தொடங்கியது
அதையடுத்து யூனியன் கிளப்பில் இருந்த விளையாட்டு உபகரணங்கள், தொலைக்காட்சிப் பெட்டிகள், கணினி உபகரணங்கள், குளிர்சாதன பெட்டிகள், ஏ.சி., மின்விசிறி, மேஜை, நாற்காலி, விளையாட்டு வீரர்களுக்கான கோப்பைகள் உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்கள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டு மாவட்ட வருவாய் அதிகாரி பழனிகுமார், கண்டோன்மெண்ட் போலீஸ் உதவி கமிஷனர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலையில் மாநகராட்சி ஊழியர்கள் மூலம் லாரிகளில் ஏற்றப்பட்டன.
ேநற்று மாலை முதல் ‘தி யூனியன் கிளப்’ கட்டிடம் பொக்லைன் எந்திரங்கள் உதவியுடன் இடித்து தரைமட்டமாக்கும் பணி தொடங்கியது. அதையொட்டி அங்கு போலீசாரும் அதிக அளவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்