குமரியில் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தது
கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசின் புதிய கட்டுப்பாடுகள் குமரி மாவட்டத்தில் நடைமுறைக்கு வந்தன. பொதுமக்கள் முக கவசம் அணிகிறார்களா? என அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.
நாகர்கோவில்,
கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசின் புதிய கட்டுப்பாடுகள் குமரி மாவட்டத்தில் நடைமுறைக்கு வந்தன. பொதுமக்கள் முக கவசம் அணிகிறார்களா? என அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.
புதிய கட்டுப்பாடுகள்
தமிழகத்தில் கட்டுக்குள் இருந்த கொரோனா தொற்று, தற்போது அதிகரித்து வருகிறது. நாள் ஒன்றுக்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். குமரி மாவட்டத்திலும் இந்த பாதிப்பு உயர்கிறது.
இதையடுத்து மாநிலம் முழுவதும் புதிய கட்டுப்பாடுகளை நேற்று முதல் தமிழக அரசு அமல்படுத்தியது.
அதன்படி தனிநபர்களும், வணிக நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், வணிக நிறுவனங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு கைகளை சுத்தம் செய்ய சானிடைசர் மற்றும் சோப்பு, தண்ணீர் வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும், அரசு பஸ்களில் இருக்கைகளில் மட்டுமே பயணிகள் அமர்ந்து பயணிக்க வேண்டும், பஸ்களில் நின்றபடி பயணிக்கக் கூடாது, கார் போன்ற வாகனங்களில் 3 பேர் மட்டுமே பயணிக்க வேண்டும், திருமண நிகழ்ச்சிகளில் 100 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும், இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகளில் 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளை மீண்டும் தமிழக அரசு அமல்படுத்தி உள்ளது.
சோதனை
குமரி மாவட்டத்திலும் இந்த கட்டுப்பாடுகளை அதிகாரிகள் நேற்று முதல் அமல்படுத்த தொடங்கி உள்ளனர். நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையம் மற்றும் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு செல்லும் பஸ்களில் போலீசாரும், மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்களும் நேற்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அரசின் வழிகாட்டுதல் படி பஸ்களில் பயணிகள் இருக்கைகளில் மட்டும் அமர்ந்து பயணம் செய்கிறார்களா? பயணிகள் அனைவரும் முக கவசம் அணிந்து உள்ளார்களா? டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் முக கவசம் அணிந்துள்ளனரா? என்பது குறித்து சோதனை செய்தனர்.
முக கவசம் அணியாத பயணிகளிடம், கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று கூறி அவர்களுக்கு கவசங்களும் வழங்கி அணியச் செய்தனர். மேலும் பஸ் நிலையங்களில் இருந்து புறப்பட்டுச் சென்ற பஸ்களுக்கு கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது.
திடீர் பரபரப்பு
அதே சமயத்தில் பஸ் நிலையங்கள் மற்றும் நகர பகுதிகளில் உள்ள டீக்கடைகள், ஓட்டல்களில் வாடிக்கையாளர்கள் 50 சதவீதம் பேர் மட்டும் அமர்ந்து உணவு மற்றும் டீ, காபி அருந்துகிறார்களா? என்பது குறித்தும் சோதனை நடத்தினர். அப்போது சமூக இடைவெளியை பின்பற்றாத அண்ணா பஸ் நிலையத்தில் உள்ள ஒரு டீக்கடை உரிமையாளர் மீதும், மற்றொரு ஓட்டல் உரிமையாளர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த நடவடிக்கை தொடரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.