நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் 2,700 படுக்கைகள் தயார்- சிறப்பு அதிகாரி அபூர்வா தகவல்
நெல்லை மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் 2,700 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது என சிறப்பு அதிகாரி அபூர்வா தெரிவித்தார்.
நெல்லை, ஏப்:
நெல்லை மாவட்டத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் 2,700 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது என்று சிறப்பு அதிகாரி அபூர்வா தெரிவித்தார்.
கொரோனா பரவல் 2-வது அலை
இந்தியாவில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுக்க தொடங்கியதை அடுத்து தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. தமிழகத்திலும் கொரோனா பரவல் 2-வது அலையை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது.
இந்த புதிய கட்டுப்பாடுகள் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளன. இந்த கட்டுப்பாடுகளை உடனே அமல்படுத்தி, கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக மாவட்டந்தோறும் சிறப்பு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
சிறப்பு அதிகாரி அபூர்வா
அதன்படி நெல்லை மாவட்டத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, தமிழக அரசின் உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று காலையில் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கி பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் விஷ்ணு, மாநகர போலீஸ் கமிஷனர் அன்பு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், திட்ட இயக்குனர் மந்திராச்சலம், நெல்லை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி டீன் ரவிச்சந்திரன், மாநகராட்சி ஆணையாளர் கண்ணன், சுகாதாரத்துறை துணை இயக்குனர் வரதராஜன், மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா, உதவி கலெக்டர் சிவ கிருஷ்ணமூர்த்தி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் விஷ்ணு விளக்கம் அளித்தார். தொடர்ந்து சிறப்பு அதிகாரி அபூர்வா ஆலோசனைகள் வழங்கி, மேலும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து வழிகாட்டி பேசினார்.
அப்போது அவர், தமிழக அரசு அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடுகள், விதிமுறைகளை தீவிரமாக அமல்படுத்த வேண்டும். இதனை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
பின்னர் சிறப்பு அதிகாரி அபூர்வா நிருபர்களிடம் கூறியதாவது:-
கொரோனா பரிசோதனை
நெல்லை மாவட்டத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஆய்வு மேற்கொண்டு உள்ளோம். மாவட்ட ஆஸ்பத்திரிகளில் 100 சதவீத படுக்கைகள் தயார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. பொதுமக்கள் அனைவரும் முக கவசம் அணிந்து செல்ல வேண்டும். இதுதொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இதேபோல் ஒவ்வொருவரும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். யாருக்கேனும் கொரோனா அறிகுறிகள் தென்பட்டால், அவர்களே முன்வந்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
நெல்லையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு சளி மற்றும் காய்ச்சல் அறிகுறியுடன் வருபவர்களுக்கு முறையாக சிகிச்சை அளிக்க ஆலோசனை வழங்கப்பட்டு உள்ளது. அறிகுறிகள் தென்பட்டால் மட்டுமே பரிசோதனை செய்ய வேண்டும்.
2,700 படுக்கை வசதி
நெல்லை மாவட்டத்தில் கொரோனா 2-வது அலையால் நோய்த்தொற்று 6.35 சதவீதம் அதிகரித்துள்ளது. எனவே புதிய கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை பின்பற்றி பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அவ்வாறு செய்தால் கொரோனவை கட்டுப்படுத்தி விடலாம்.
கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், நெல்லை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் 2,700 படுக்கை வசதிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
கோவில் திருவிழாக்கள்
கோவில் திருவிழாக்கள், திருமண விழாக்கள் ஆகியவற்றிற்கு அரசு அறிவித்துள்ள விதிமுறைகள் கட்டாயமாக பின்பற்றப்படும்.
மாவட்டத்தில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது, நோயை கட்டுப்படுத்த மற்றும் சிகிச்சை அளிக்க 5 வழிமுறைகளை நடைமுறைப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
5 வழிமுறைகள்
அதன்படி முதலாவதாக நோய் தடுப்பு குறித்து மக்களுக்கு அதிக அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது, குறிப்பாக வீட்டை விட்டு வெளியில் வரும் பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும், முக கவசம் அணியாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
2-வதாக கொரோனா பரிசோதனையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 3-வதாக இந்திய மருந்துகளான கபசுர குடிநீர், அதிமதுர குடிநீர், அமுக்குரா சூரணம் ஆகியவற்றை அதிக அளவில் மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
4-வதாக தகுதியான நபர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். 5-வதாக நோய் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதுமான மருந்து, படுக்கை வசதிகளை தயாராக வைத்திருக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த 5️ வழிமுறைகளை நடைமுறைப்படுத்தி கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.