காரியாபட்டியில் சிறுத்தைகள் நடமாட்டமா?
காரியாபட்டியில் சிறுத்தைகள் நடமாட்டம் இருக்கிறதா என வனத்துறையினர் 4-வது நாளாக தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
காரியாபட்டி,
காரியாபட்டியில் சிறுத்தைகள் நடமாட்டம் இருக்கிறதா என வனத்துறையினர் 4-வது நாளாக தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வன விலங்குகள்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு போன்ற மலைகளில் வனவிலங்குகள் அதிகமாக வசித்து வருகின்றன.
காலப்போக்கில் கோடை காலங்களில் தண்ணீருக்காக வனவிலங்குகள் மற்ற பகுதிகளுக்கு வருவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக காரியாபட்டி மற்றும் நரிக்குடி பகுதிகளில் சுற்றியுள்ள காடுகளில் புள்ளி மான்கள் அதிகமாக வருவதுண்டு.
அதற்கு பிறகு காட்டுப்பன்றிகள் இந்த பகுதியில் விவசாயம் செய்துள்ள பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக காரியாபட்டி பகுதியில் சிறுத்தைகள் நடமாடுவதாக தகவல் பரவியது.
தேடுதல் வேட்டை
இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து இப்பகுதியில் தீவிரமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று காரியாபட்டி கரியனேந்தல் பகுதியில் ஒரு சிறுவன் எடுத்த வீடியோ படம் வலை தளத்தில் பரவியது. அந்த வீடியோவில் சிறுத்தை குட்டிகள் போல் 2 குட்டிகள் முட்புதரில் கிடப்பது போல் காணப்பட்டது இந்த தகவல் அறிந்த வனத்துறையினர் நேற்று காலையில் அந்த பகுதியிலேயே தீவிரமாக தேடுதல் வேட்டை நடத்தினர்.
பொதுமக்கள் பீதி
அப்போது அந்த அந்த வீடியோவை பார்த்தபோது அது காட்டுப்பூனைகளாக இருக்கலாம் என தெரிவித்தனர். சிறுத்தைகள் குட்டி போட்டிருந்தால் அந்த இடத்தை விட்டு அந்த சிறுத்தைகள் அகலாமல் இருக்கும் என்று தெரிவித்தனர்.
இதனால் அது தவறான தகவல் என்று இருந்தாலும் இப்பகுதி மக்கள் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்டு அஞ்சி இரவு நேரங்களில் வெளியே செல்லாமல் காட்டுப்பகுதிக்கு செல்லாமல், வீட்டிலேயே முடங்கி இருக்கின்றனர்.
வனத்துறை தேடுதல் வேட்டையில் சிறுத்தை சிக்காததால் வீட்டில் வசிக்கும் பொதுமக்கள் மேலும் பீதி அடைந்து காணப்படுகின்றனர்.