பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய அலுவலகம் அம்மா திருமண மண்டபத்திற்கு இடமாற்றம்

ரூ.2¾ கோடியில் புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளதால் தெற்கு ஒன்றிய அலுவலகம் தற்காலிகமாக அம்மா திருமண மண்டபத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

Update: 2021-04-10 18:08 GMT
பொள்ளாச்சி

ரூ.2¾ கோடியில் புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளதால் தெற்கு ஒன்றிய அலுவலகம் தற்காலிகமாக அம்மா திருமண மண்டபத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

தெற்கு ஒன்றிய அலுவலகம்

பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில் இருந்து பிரித்து தெற்கு ஒன்றியம் தனியாக உருவாக்கப்பட்டது. தெற்கு ஒன்றிய கட்டுப்பாட்டில் மாக்கினாம்பட்டி, சின்னாம்பாளையம், ஊஞ்சவேலாம்பட்டி, நாயக்கன்பாளையம் உள்பட 26 கிராம ஊராட்சிகள் உள்ளன. 

ஒன்றிய அலுவலகத்தில் பொது பிரிவு, என்ஜினீயர் பிரிவு, வட்டார வளர்ச்சி அலுவலர், ஆணையாளர் ஆகியோருக்கு தனி அறைகள் உள்ளன. ஒன்றிய அலுவலகத்துக்கு கட்டிடம் கட்டி 50 ஆண்டுகளுக்கு மேல்ஆவதால் கட்டிடம் மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது.

பழைய கட்டிடத்தை இடித்து விட்டு புதிதாக கட்டிடம் கட்டப்பட உள்ளது. கட்டிட பணிகள் தொடங்க உள்ளதால் ஒன்றிய அலுவலகம் தற்காலிகமாக அம்மா திருமண மண்டபத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளது. 

இதன் காரணமாக அலுவலகத்தில் இருந்து மேஜை, கணினி உள்ளிட்ட பொருட்களையும் லாரியில் ஏற்றி அம்மா திருமண மண்டபத்திற்கு கொண்டு சென்றனர். மேலும் வேளாண்மை துறை, தோட்டக்கலைத்துறை அலுவலகங்களும் இடமாற்றம் செய்யப்பட உள்ளன. இதுகுறித்து ஒன்றிய அதிகாரிகள் கூறியதாவது:-

தற்காலிகமாக இடமாற்றம்

பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய அலுவலகத்துக்கு ரூ.2 கோடியே 75 லட்சத்தில் புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது. இதற்காக அலுவலகம் தற்காலிகமாக கோவை ரோடு நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் எதிரே உள்ள அம்மா திருமண மண்டபத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

நாளை (திங்கட்கிழமை) முதல் அம்மா திருமண மண்டபத்தில் அலுவலகம் செயல்படும். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது. பொள்ளாச்சி வடக்கு, ஆனைமலை ஒன்றியங்களுக்கு புதிதாக கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளது. 

இதேபோன்று தரைதளம் உள்பட 3 தளங்களுடன் கட்டிடம் கட்டப்படும். இதற்காக பணிகள் விரைவில் தொடங்க உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்