அரக்கோணம் இரட்டை கொலையை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

அரக்கோணம் இரட்டை கொலையை கண்டித்து மாவட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2021-04-10 17:54 GMT
கரூர்
ஆர்ப்பாட்டம்
அரக்கோணத்தில் நடந்த இரட்டை கொலையில் தொடர்புடைய குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி நேற்று கரூர் ஆர்.எம்.எஸ். தபால் அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் ஜெயராமன் தலைமை தாங்கினார். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர். இதேபோல் கரூர் தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.
குளித்தலை
இதேபோல் குளித்தலையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கரூர் கிழக்கு மாவட்ட செயலாளர் தேவேந்திரன் தலைமை தாங்கினார். மாநில விவசாய பிரிவு துணை செயலாளர் குறிச்சி சக்திவேல் முன்னிலை வகித்தார். குளித்தலை ஒன்றிய செயலாளர் மாயவன் வரவேற்று பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், படுகொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கோஷம் எழுப்பினர். இதையடுத்து தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக கிழக்கு மாவட்ட செயலாளர் உள்பட 30 பேர் மீது குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்