ஊட்டியில் மாரியம்மன் கோவில் தேரோட்டம் ரத்து

ஊட்டியில் மாரியம்மன் கோவில் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டது. ஆனால் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதிக்கப்பட்டது.

Update: 2021-04-10 17:50 GMT
ஊட்டி,

தமிழகத்தில் கொரோனா 2-வது அலை பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த திருவிழா, மத கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. மத வழிபாட்டு தலங்களில் இரவு 8 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறது. 

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம். 

நடப்பாண்டில் கடந்த மார்ச் 19-ந் தேதி பூச்சொரிதலுடன் தேர்த்திருவிழா தொடங்கியது. 
தொடர்ந்து ஒவ்வொரு சமூகம் சார்பில் தேர் ஊர்வலம் முக்கிய வீதிகளில் குறைந்த நபர்களோடு நடத்தப்பட்டு வந்தது.

தமிழக அரசு திருவிழா நடத்த தடை விதித்ததால் மாரியம்மன் கோவிலில் தேர் ஊர்வலம் மற்றும் திருவிழா நடத்த அனுமதி இல்லை. இதனால் தினமும் மாலையில் நடந்து வந்த தேர் ஊர்வலம் நேற்று முதல் ரத்து செய்யப்பட்டு உள்ளது. 

அதன் காரணமாக சிறப்பு அலங்காரத்துடன் மாரியம்மன் முக்கிய வீதிகளில் உலா வருவது நிறுத்தப்பட்டு இருக்கிறது. அதற்கு பதிலாக பக்தர்கள் வழக்கம்போல் கோவில் வளாகத்துக்குள் சமூக இடைவெளியை கடைபிடித்தும், முககவசம் அணிந்தும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறது. உபயதாரர்கள் மூலம் நேற்று ஹோமத்துக்கான சிறப்பு பூஜை நடந்தது.

இரவு 8 மணிக்கு கோவில் வளாகத்துக்குள் தேர் ஊர்வலம் எளிமையாக நடந்தது. வருகிற 20-ந் தேதி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான திருத்தேர் வடம் பிடித்தல் எனும் தேரோட்டம் நடைபெற இருந்தது. கொரோனா அச்சுறுத்தல் மற்றும் கட்டுப்பாடுகளால் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டது. கடந்த ஆண்டும் தொற்று பாதிப்பு காரணமாக ரத்தானது குறிப்பிடத்தக்கது.

ஊட்டி எல்க்ஹில் முருகன் கோவில், இரட்டை பிள்ளையார் கோவில், லோயர் பஜார் சுப்பிரமணிய சுவாமி கோவில், பொக்காபுரம் மாரியம்மன் கோவில், மஞ்சகொம்பை நாகராஜர் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் அரசின் விதிமுறைகளை பின்பற்றி சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறது. திருவிழா, உற்சவம் ரத்து செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்