ஒரு மணி நேரம் மட்டுமே சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

ஊட்டி தாவரவியல் பூங்காவை ரசிக்க சுற்றுலா பயணிகளுக்கு ஒரு மணி நேரம் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. மேலும் புல்வெளிகளில் அமர தடை விதிக்கப்பட்டு உள்ளது.

Update: 2021-04-10 17:50 GMT
ஊட்டி,

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க பொழுதுபோக்கு பூங்காக்கள் 50 சதவீத பேருடன் சமூக இடைவெளியை கடைபிடித்து செயல்பட வேண்டும் என்று அரசு கட்டுப்பாடுகள் விதித்தது. நீலகிரி மாவட்டத்தில் நேற்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தது. 

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு காய்ச்சல் உள்ளதா? என்று தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அதிக வெப்பநிலை இருந்தால் உள்ளே அனுமதிக்கப்படுவது இல்லை. 

பூ
ங்காவை ஒரு மணி நேரம் மட்டுமே சுற்றி பார்க்க அனுமதிக்கப்படுகிறது. பூங்காவுக்குள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். முககவசம் அணியாவிட்டால் ரூ.200, எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.

சுற்றுலா பயணிகள் ஒரே இடத்தில் கூடாமல் இருக்கவும், ஒரு வழியே சென்று திரும்பி வரவும் வழிவகை செய்யப்பட்டு உள்ளது. அவர்கள் தங்களது குடும்பத்தினருடன் புல்வெளிகளில் அமர தடை செய்யப்பட்டு இருக்கிறது. இதை தொடர்ந்து நேற்று பெரிய புல்வெளி மைதானம், சிறிய புல்வெளி மைதானத்தை சுற்றிலும் கம்பிகள் வைத்து கயிறு கட்டப்பட்டு மூடப்பட்டது.

சுற்றுலா பயணிகள் உள்ளே செல்ல அனுமதி இல்லை. அவர்கள் பெரணி இல்லம், கண்ணாடி மாளிகை, செல்பி ஸ்பாட், இத்தாலியன் பூங்கா உள்ளிட்ட இடங்களை கண்டு ரசித்தனர். கண்ணாடி மாளிகைக்குள் ஒரே நேரத்தில் 15 பேர் மட்டும் கண்டு ரசிக்க அனுமதிக்கப்படுகிறது. அதிகம் பேர் இருந்தால் வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். அரசு தெரிவித்த வழிமுறைகளை கடைபிடித்து சுற்றுலா பயணிகள் பூங்காவை கண்டு ரசித்தனர்.
படகு இல்லத்தில் நுழையும் சுற்றுலா பயணிகள் முககவசம் அணிந்து படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். ஒரே நேரத்தில் சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வந்ததால், அவர்களுக்கு டிக்கெட் வழங்குவது சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது. 

படகு சவாரி மற்றும் ஏரியை கண்டு ரசித்து சில சுற்றுலா பயணிகள் சென்ற பின்னர், மற்றவர்களுக்கு டிக்கெட் வழங்கப்பட்டது. இதேபோல் ஊட்டி ரோஜா பூங்கா, தேயிலை பூங்கா, தொட்டபெட்டா, சூட்டிங்மட்டம், பைக்காரா படகு இல்லத்தில் 50 சதவீத சுற்றுலா பயணிகள் இருக்கும் வகையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு கடைபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்த பின்னர் உடனடியாக முககவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்