மேட்டுப்பாளையம் பூ மார்க்கெட்டில் அமாவாசையையொட்டி பூக்கள் வரத்து அதிகரிப்பு
மேட்டுப்பாளையம் பூ மார்க்கெட்டில் அமாவாசையையொட்டி பூக்கள் வரத்து அதிகரித்தது.
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் சிறுமுகை ரோடு சந்தைத் திடலில் 10-க்கும் மேற்பட்ட பூ கமிஷன் மண்டிகள் உள்ளன. இங்கு ஈரோடு மாவட்டம் பவானிசாகர், கொத்தமங்கலம் மற்றும் மேட்டுப்பாளையம், சிறுமுகை, அன்னதாசம்பாளையம், காரமடை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து விவசாயிகள் பூக்களை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.
பின்னர் ஏலம் பூக்கல் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் நேற்று அமாவாசையொட்டி பூ மார்க்கெட்டுக்கு பூக்கள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. பல்வேறு பகுதிகளில் இருந்து மல்லிகைப்பூ 700 கிலோ, சம்பங்கி 700 கிலோ, முல்லைப்பூ 200 கிலோ, அரளிப்பூ 700 கிலோ, ரோஸ் 500 கிலோ விற்பனைக்கு வந்திருந்தது.
பூக்கள் வரத்து அதிகரித்து காணப்பட்டபோதும் பூக்களின் விலை முந்தைய நாளைவிட சற்று உயர்ந்து காணப்பட்டது. இதன்படி ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.320-க்கும், ரூ.250-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ முல்லைப்பூ ரூ.350-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதேபோல சம்பங்கி ஒரு கிலோ ரூ.110-க்கும், அரளிப்பூ ஒரு கிலோ ரூ.200, ரோஸ் ஒரு கிலோ ரூ.200-க்கும் விற்பனையானது. மேலும் வருகிற 14-ந் தேதி சித்திரை புத்தாண்டு தினத்தையையொட்டி மேட்டுப்பாளையம் பூ மார்க்கெட்டிற்கு மேலும் பூ வரத்து அதிகரிக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.